தற்போதைய செய்திகள்

கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் கைது செய்வதற்கான தடையும் 26-ந்தேதி வரை நீட்டிப்பு….

புதுடெல்லி,

ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கு அதிரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, அவரைக் கைது செய்வதற்கான தடையும் 26-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் கைது

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு சாதகமாக செயல்பட்ட கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.35 கோடி கைமாறாக வழங்கப்பட்டதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி உள்ளது.

இதில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தை ஆதாரமாகக் கொண்டு, கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.

அமலாக்கத்துறை வழக்கு

இதே விவகாரத்தில் நடைபெற்ற கருப்புப் பண முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அதே நேரம் அமலாக்கத்துறை இந்த வழக்கில் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுகிறது என்றும், தனக்கு விதிக்கப்பட்ட சம்மன்களை ரத்து செய்யக் கோரியும், கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

20-ந்தேதி வரை தடை

இந்த வழக்கானது உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளியன்று (9- ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 20-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு, அமலாக்கத் துறை ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கபில்சிபல்

இந்நிலையில், நீதிபதிகள் முரளிதர் மற்றும் மேத்தா ஆகியோர் அடங்கிய டெல்லி உயர்நீதிமன்ற அமர்வின் முன்பு கார்த்தி சிதம்பரத்தின் தரப்பு வழக்கறிஞர் ஆஜரானார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்காக முதலில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வரும் 20-ஆம் தேதியன்று ஆஜராக இயலாத நிலை என்பதால், வழக்கு விசாரணையை 22-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கக் கோரினார்.

2 நாட்கள் பாதுகாப்பு

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத் திவாகர் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்காததால், வழக்கு விசாரணையை 20-ஆம் தேதிக்கு பதிலாக, 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதில் இருந்து கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் இரு நாட்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது.

அதிரடி மாற்றம்

இந்நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கு அதிரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, அவரைக் கைது செய்வதற்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை சம்மன்களுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த தனியான மனுவொன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

26-ந்தேதி வரை தடை

அப்பொழுது இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு என்ன நிலையில் உள்ளது என்று விசாரித்த நீதிபதி, பின்னர் அதிரடியாக அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

அத்துடன் வழக்கை 26-ந் தேதிக்கு ஒத்தி வைத்த அவர், அதுவரை கார்த்தி சிதம்பரத்தினை அமலாக்கத்துறை கைது செய்யவும் தடை விதித்தார்.

……




Leave a Reply