BREAKING NEWS

காமராஜர் வழியிலேயே நாகரிக அரசியல் செய்தார்..!

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குறித்த நினைவலைகளை தமிழக காங்கிரஸ் கட்சி கலைப்பிரிவு தலைவரான மு.சந்திரசேகரன் பகிர்கிறார்: ‘‘காங்கிரஸ் மீதும் காமராஜர் மீதும் சிவாஜி மிகுந்த பற்றுகொண்டிருந்தார். அது ஒரு தந்தை தனயன் உறவை மீறிய ஒரு பாசநட்பு. அவரது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் காமராஜர் நேரில் வந்து ஆசீர்வதிப்பாராம். ஒருமுறை ஒரு பிறந்தநாளின்போது காமராஜர் உடல்நிலை சரியில்லாததால் வரமாட்டார் என காமராஜர் வீட்டிலிருந்து தகவல் வந்ததில் தவித்துப்போய்விட்டாராம் சிவாஜி.

ஆனால் அன்று காமராஜர் வந்தார். தன் மருத்துவர் தடுத்தபோது, ‘‘நான் போகலைன்னா சிவாஜி ஏமாந்துடுவார். நம்ம கட்சிக்காக வெயில் மழைன்னு பார்க்காம அலையறவருக்கு இந்த ஒருநாளில் நான் சின்ன மகிழ்ச்சியத்தரலைன்னா நல்லா இருக்குமா’’ என தடையை மீறி ஓடிவந்தார் என அவருடன் இருந்தவர்கள் தகவல் சொன்னபோது சிவாஜி கிட்டதட்ட அழுதே விட்டார்.

காங்கிரஸிருந்து முரண்பட்டு வெளியேறி தனிக்கட்சி கண்டபின்பும் அக்கட்சியையும் அதன் தலைவர்களையும் சிவாஜி ஒருபோதும் விமர்சித்ததில்லை. ஒருமுறை கட்சிப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்ருந்த ஒரு முக்கிய நிர்வாகி அன்றைய காங்கிரஸ் தலைவரை விமர்சிக்கத் தொடங்க கோபமான சிவாஜி விடுவிடுவென நடந்துசென்று மைக்கை ஆ.ப் செய்துவிட்டு அவரது சட்டையைப்பிடித்து இழுத்து, ‘‘உட்காரு’’ எனச் சொல்லிவிட்டார். அப்படி தன் தலைவர் காமராஜர் வழியிலேயே நாகரிக அரசியல் செய்தார்.

இன்று திரையுலகில் நன்றியுணர்வு அருகிவிட்டது. ஆனால், சிவாஜி தன்னை வளர்த்துவிட்டவர்களை கடைசிக்காலம் வரை அவர்களிடம் நன்றியோடு நடந்துகொண்டார். ஒருமுறை அண்ணாமலை மன்றத்தில் அவருக்கு பாராட்டுவிழா ஏற்பாடாகியிருந்தது. அதில் சிறப்பு விருந்தினர் பராசக்தியின் இரட்டை இயக்குநர்களில் ஒருவரான கிருஷ்ணன். அன்று முக்கிய வேலை இருந்ததால் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதலில் ஆர்வம் காட்டாதிருந்த சிவாஜி அதற்கான பத்திரிகையை அவரிடம் தந்தபோதுதான் கிருஷ்ணன் வருவது தெரிந்தது அவருக்கு. அதிர்ச்சியடைந்தார். ‘‘இதை ஏன் என்னிடம் சொல்லலை. விழாவுக்கு நான் வர்றேன். கிருஷ்ணன் அண்ணனை கௌரவமாக கார்வைத்து அழைத்துவரணும் . சின்ன சங்கடம்கூட இல்லாமல் அவரை திருப்பி அனுப்பணும்’’ என அறிவுரை வழங்கியவர், ‘‘அண்ணன் மேடைக்கு வர்றதுக்கு முன்ன நான் அங்க இருக்கணும்’’ என விழா தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே மேடைக்கு வந்துவிட்டார். அவருடைய குருபக்தியை நினைத்து அசந்துபோனோம். விழாவில் இயக்குநர் கிருஷ்ணன் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி பெற்றார். விழாமுடிந்து தன் மேற்பார்வையிலேயே அவரை அனுப்பிவைத்தார்.

மறுதினம் என்னையும் அலுவலகத்தில் இருந்த இன்னொரு நிர்வாகியையும் அழைத்து 5,000 ரூபாய் கையில் தந்து, ‘‘இதை கிருஷ்ணன் அண்ணனின் சேர்ப்பித்துடுங்க’’ என்று சொன்னார். அதை இயக்குநர் கிருஷ்ணன் மனைவியிடம் தந்தபோதுதான் எனக்கு தெரிந்தது. அவர் அவ்வப்போது கிருஷ்ணன் அவர்களின் குடும்பத்திற்கு உதவிவந்தது.

அதேபோல் தன் முதற்படத்தை தயாரித்த வேலுார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கல் தினத்தன்று நேரில் சென்று ஆசி பெற்றுவருவார். அவர் காலத்திற்குப்பிறகும் அவர் மனைவியை சென்று ஆசி பெற்றுவந்தார். சிவாஜியின் மறைவுக்குப்பின்பு பிரபு அதைத் தொடர்கிறார். ஒரு படம் முடிந்ததும் தயாரிப்பாளரை மறந்துவிடுகிற இன்றைய உலகில் தன் முதற்பட தாயரிப்பாளரிடமும் அவர் குடும்பத்தாரிடமும் காலம் முழுக்க மறக்காமல் நன்றியுணர்ச்சியோடு நடந்துகொண்டார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

சிவாஜியைப் போன்று எளிமையிலும் எந்தப்பாகுபாடும் இன்றி அனைவரிடமும் பாசத்தோடு பழகுவதிலும் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. தான் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் பாட்ஷா என்ற ஆட்டோ டிரைவரிடம் நட்பு உருவானது. பின்னாளில் சிவாஜி புகழ்பெற்றபிறகும் அவருடன் அதே நட்பை தொடர்ந்தார்.  எத்தனை பெரிய வி.ஐ.பியையும் காத்திருக்கச்சொல்லி அழைத்துச்செல்வோம். ஆனால், பாட்ஷா வந்தால் நேரே சிவாஜி அறைக்கு சென்று பேசிக்கொண்டிருப்பார். ஆச்சர்யமாக பார்ப்போம் நாங்கள் அதை.

அரசியல் கட்சி தொங்கியபோது, யாரிடமும் நிதி கேட்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதை எந்தநிலையிலும் கவனத்தோடு கடைப்பிடித்தும் வந்தார். கட்சிக்கு தன் சொந்தப் பணத்தையே செலவிட்டார். ஒருமுறை கட்சி நிர்வாகிகள் கட்சி நிதிக்காக ஒரு ரசீது புத்தகம் அடித்துவந்து காட்டினார்கள்.  வந்ததே கோபம் அவருக்கு. ‘‘நாம் பொதுமக்களை தொந்தரவு செய்யவா கட்சி ஆரம்பித்தோம். சிவாஜிகணேசன் சொந்தப்பணம்தான் கட்சிக்கு பயன்படணும். யாரிடமும் சென்று கையேந்தவேண்டியதில்லை’’ என சத்தம் போட்டார். ரசீது அடித்து வந்த நிர்வாகி அங்கிருந்து ஓடியே போய்விட்டார்.’’

– இனியன்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *