BREAKING NEWS

கல்லூரி மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை – பெற்றோர்களுக்கும் போலீசார் அறிவுரை.

 

சென்னையில் உள்ள கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஆயுதங்களுடன் மாணவர்கள் சிலர் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது. இதுபோன்று ஆயுதங்களை கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உயரதிகாரி எச்சரித்துள்ளார். பெற்றோர்களும் தங்கள் மகன்களை கண்காணிக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

கல்லூரி மாணவர்கள்

கோடை விடுமுறைக்கு பின்னர் சென்னையில் உள்ள கல்லூரிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் சிலர் ஆயுதங்களுடன் வந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்தது. கல்லூரிக்கு கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.

சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் சாரங்கன் இன்று மாநில கல்லூரிக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். காவல்துறையினர் கல்லூரியின் வாயிலில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். உள்ளே வந்த மாணவர்கள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

போலீஸ் எச்சரிக்கை

கல்லூரியில் படித்து முடித்த மாணவர்கள் ஆயுதங்களுடன் கல்லூரிக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கூடுதல் ஆணையர் சாரங்கன் எச்சரித்தார். பெற்றோர்களும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தவறான வழிக்கு செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மாநில கல்லூரி மட்டுமின்றி, சென்னையில் உள்ள மற்ற கலை கல்லூரிகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநில கல்லூரி விரிவுரையாளர் ஒருவரிடம் கேட்ட போது, மாணவர்கள் இது போன்று அயுதங்களை எடுத்து வருவது ஒன்றும் புதிதல்ல என்றார்.

புகாரின் பேரில் நடவடிக்கை

அப்படியென்றால் எதற்காக மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று கேட்ட போது, ஆயுதங்களை எடுத்து வந்த மாணவர்கள் கல்லூரி ஆசிரியர்களை மிரட்டியதை தொடர்ந்து அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரிலேயே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மாணவர்கள் பலரையும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். தங்கள் மகன்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்று பெற்றோர் கொடுத்த உறுதி மொழியின் படி அவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் சினிமா, தொலைக்காட்சி ஆகியவையும் மாணவர்களின் ஆயுத கலாச்சாரத்துக்கு காரணம் என்று கல்வியாளர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். ஆயுதங்களை வைத்திருப்போர் ஹீரோக்கள் போல சித்தரிப்பதால் தான் இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

——




Leave a Reply