BREAKING NEWS

கருத்துக் கணிப்பும்… கருத்துத் திணிப்பும்..!

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பத்திரிகைகளை ‘பேரறிவாளர் நெஞ்சில் பிறந்தது’ என்கிறார்.‘காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி’ என அவர் சொல்வது ஆழ்ந்த பொருள் கொண்டது.

தொழில் நுட்பம் பெருகி காட்சி ஊடகங்கள் வளர்ந்துள்ள இச்சூழலில் 24  மணி நேர செய்தி சேனல்களின் களத்தில் பாவேந்தரின் கவிதை அவைகளுக்கும் பொருந்தும்தானே.

செய்திகளை முந்தித் தர வேண்டுமென்ற உத்வேகத்தில் காட்சி ஊடகங்கள் பலவிதமான தந்திரங்களை கையாளுகின்றன. ஆனால், அவை இப்போதுதான் தொடங்கின என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது.நாற்பதுஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க நாவலாசிரியர் இர்விங் வாலஸ் எழுதிய “ தி ஆல்மைட்டி” இரண்டு பெரும் பத்திரிகைகளின் விற்பனைப் போட்டியை மையமாகக் கொண்ட கதை. நாவலின் எதிர் நாயகனும் பகாசுர பத்திரிகையின் அதிபருமான கதாபாத்திரம் செய்திகளை சேகரிப்பதற்கு முதன்மை தராமல் செய்திகளை உற்பத்திச் செய்யும். இப்போதும் அதைப்போல சில ஊடகங்கள் செய்திகளை உற்பத்தி செய்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

அதுவும் இந்த ஊடகங்களுக்கு தேர்தல் வந்துவிட்டால் போதும்.தேர்தல் குறித்து விவாதம், கலந்துரையாடல், நேர்முகம், அலசல் எனப் பல ஜோடனை மேடைகள். தேர்தலுக்கு முன்பு ஒரு கருத்துக் கணிப்பு. தேர்தலுக்கு பின்பு ஒரு கருத்துக் கணிப்பு.

தேர்தலுக்கு முன்பு வெளியிடப்படும் கருத்துக் கணிப்பு ஏதாவது ஒரு கட்சிக்கு சாதகமாக இருந்து, அந்தக் கணிப்புப் பொய்த்துப் போனால்கூட நம்மால் புரிந்து கொள்ள முடியும். அந்தக் கணிப்பு சாதகமாயிருந்த கட்சிக்கு அந்த ‘சேனல்’ ஏதோ உதவி செய்திருக்கிறது. அந்தக் கட்சியின் மாற்றுப் பிரசார உத்தி எனவும் அர்த்தம் கொள்ள முடிகிறது.

ஏனென்றால் நமது நாட்டில் ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடுகிற வாக்காளர்களின் எண்ணிக்கைக் கணிசமாக உண்டு. இந்த மந்தைக் குணம் இந்தியர்களின் விசேஷ குனாம்சங்களில் ஒன்று. பெரும்பான்மையோடு ஒத்துப் போகிற, ‘தனக்கு’ என்று கருத்துச் சமைக்க முடியாமை என்பதெல்லாம் நமக்குப் பழக்கப்பட்டவை. ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்ற பழமொழியைக் கேட்டே வாழ்ந்தவர்கள் அல்லவோ நாம். இந்த உளவியலை, கட்சிகள் சார்புடைய , தேர்தலுக்கு முந்தையக் கருத்துக் கணிப்புகள் ஈவுகள் ஆக்குகின்றன.

தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்பு கட்சிசார்புடையதாக இருந்தால் அதை எப்படிப் புரிந்து கொள்வது? தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பு எந்த விதத்திலும் வாக்குகளைக் கூட்டவோ குறைக்கவோ போவதில்லை. பின் எதற்கு அந்த கணிப்பு? வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லு நடத்த                 திட்டமிடுபவர்களுக்ககாக அல்லாமல் ‘அது’ வேறெதற்கு பயன்? இல்லையில்லை. நாங்கள் மக்களின்  எண்ணங்களைப் பிரதிபலிக்கிறோம் என்று சொன்னால், தேர்தல் முடிவுகளே உங்களை மறுக்கின்றனவே!.

நேர்மையான கருத்துக் கணிப்பாக இருக்கலாம் என்ற நம்பிக்கையை முன் வைத்துப் பேசினால், அதன் செயல்பாட்டு தன்மைகளில் அறிவியல் பிழைகள் உள்ளன எனத் தெளிவாக அம்பலமாகிறது. அல்லது கணிப்புகளை வெளியிட்டவர்கள் களப்பணியில் செயல்படாமல் மேஜை இதழியல்செய்கிறார்கள்[table journalism} என்று பொருள்.

சான்றுக்கு தற்போதைய அரியானா, மகராஷ்டிரா தேர்தல் முடிந்த பின்பு முக்கிய செய்திச் சேனல்களில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளையும்  வாக்கு எண்ணிக்கையில் வெளியான முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

அரியானாவில் மொத்தத் தொகுதிகள் தொந்நூறு. இதில் பா.ஜ.க நிச்சயம் வெற்றி பெரும் தொகுதிகள் என்று டைம்ஸ் நவ் வெளியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை71.  நியுஸ் 18  வெளியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை 75. ஏபிபி சொல்வது 72, ரிபப்ளிக் டி.வி கணித்தது 57.., டி.வி 9 பாரத்வர்ஷ் கணித்தது 47. ஆனால், முடிவுகள் வெளியான பின்பே தெரிகிறது பா.ஜ.க வெற்றி பெற்றது வெறும் நாற்பது தொகுதிகள்தான்.தனித்து ஆட்சி அமைக்க முடியாத எண்ணிக்கை.

பா.ஜ.க வெற்றியின் எண்ணிக்கையை, அல்ல அல்ல கணிப்பு வெற்றியை ஏன் ராட்சச பலூன் சைசுக்கு ஊதிப் பெருக்கினார்கள் என்ற கேள்வி சாதாரண இந்தியக் குடிமகனின் உள்ளத்தில் எழுவது இயல்புதானே?

பா.ஜ.க வெற்றியின் விழுக்காடு 44.4% . ஆனால், கணிப்பு விழக்காடு 83.3%. கணிப்புகளில் முன்னே பின்னே இருக்கத்தான் செய்யும். ஆனால், இந்த முன்னே பின்னே என்பது இரு மடங்கு விழுக்காடா? ஊடகங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது இதழியல் அறம் அல்லவோ!?

இதே கதைதான் மகராஷ்டிராவிலும் நடந்திருக்கிறது. மகராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என்று நியூஸ் 18 கணித்த இடங்கள் 243.  டைம்ஸ் நவ் கணக்கு 230. இந்தியா டுடே போட்ட கணக்கு 181. ஏபிபி நியூஸ் 204. ரிபப்ளிக் டி விவி 223. ஆனால், மக்கள் கொடுத்த தீர்ப்பு 161.

இந்த ஊடகங்கள் காங்கிரஸ் கட்சியையும் அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசையும் குழி தோண்டி புதைத்தன. ஆனால், வாக்காளர்கள் புதையலை தேடுபவர்களாய் மாறி காங்கிரசுக்கு மறு வாழ்வுக் கொடுத்து விட்டார்கள் . இத்தனைக்கும் நரேந்திர மோடி, அமித்ஷா, அமைச்சர் பரிவாரங்கள் , ஆட்சி அதிகாரம் எனப் பல பகீரத பிரயத்தனங்களுக்கு பின்பு.

தேர்தலுக்கு முன்பு நடந்த பிரசாரக் கூட்டத்தில் மாண்புமிகு பிரதமர், பாகிஸ்தானுக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று மானுடம் பாடும் வானம்பாடியாய் {?} மாறிய பிறகு மக்கள் தந்த தீர்ப்பு. சரியாக தேர்தல் நாளன்று மற்றுமொரு சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற செய்தியை அரங்கேற்றம் செய்த பிறகு மக்கள் அளித்த தீர்ப்பு.

மலை ரயில்களுக்கு எப்போதுமே இரண்டு என்ஜின்கள் தேவைப்படும் பின்னாலிருந்து தள்ளுவதற்கு ஓரு என்ஜின். முன்னால் இழுப்பதற்கு ஒரு என்ஜின்.தேர்தல் என்னும் மலை ஏறிய பின்பு பின்னாலிருந்து தள்ளிய சிவ சேனா என்ற என்ஜினை கழற்றி விட வைத்திருந்த ரகசிய திட்டத்தில் மண் அள்ளிப் போட்டு விட்டது மக்கள் அளித்த தீர்ப்பு. அதனால்தான் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் முடிந்த பின்பும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மரியாதை நிமித்த சந்திப்புகள் என்ற பெயரில் பலப் பல பஞ்சாயத்துகள் நடக்கின்றன. தேனிலவின் போதே விவாகரத்துக்கு விண்ணப்பம் பூர்த்திச் செய்யும் வினோத தம்பதிளாக பா.ஜ.க-வும் சிவ சேனாவும்.

சேனாவின் அதிகாரபூர்வ கட்சி ஏடு சமாஸ் தலையங்கம் தீட்டுகிறது பா.ஜ.க-வின் அதிகார வெறிக்கு மக்களின் பதிலடி என்று. அட..! முதலிரவு பாலும் பழமும், வைபவத்தில் பால் கிண்ணத்தில் நஞ்சு. அந்த அளவுக்கு மனப் பொருத்தம்  இல்லாத ஜோடி ஒன்றும் இல்லை.

பா.ஜ.க-வின் பிதாமகன்களில் ஒருவரான சாவர்க்கருக்கு ஆதர்ச தலைவர்களில் ஒருவர் அடால்ப் ஹிட்லர். சேனாவின் பிதாமகன் பால் தாக்கரேவுக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஹிட்லர் எழதிய மெயின் கேம்ப். எனவே, இவர்கள் இணைந்து நடப்பதற்கான பாதை திறந்தேதான் இருக்கிறது. ஆனால், மக்கள் இணைந்து பயணிக்க முடியுமா என்பதுதான் பெருங்கேள்வி.

 – வே.எழிலரசு

, தொடர்புக்கு: vezhilarasu@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *