BREAKING NEWS

கருணாநிதியின் செயல்பாடுகளின் வீடியோ வெளியீடு – தொண்டர்கள் மகிழ்ச்சி.

கருணாநிதியின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு, அவரின் ஒன்றரை ஆண்டுகால செயல்பாடுகள் தி.மு.க. சார்பில் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால், அந்த கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

95வது பிறந்தநாள்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை, அந்த கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும், உடல்நலக்குறைவால் கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு பெற்று வரும், கருணாநிதி வீட்டின் முன் கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.

உடல்நல முன்னேற்றம்

இந்த நிலையில், கடந்த ஒன்றை ஆண்டுகாலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கருணாநிதியால் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கும், முரசொலி அலுவலகத்துக்கும், சட்டசபைக்கும் செல்ல முடியவில்லை. இந்த நிலையில், அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால், அவர் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது முரசொலி அலுவலகத்துக்கும், அண்ணா அறிவாலயத்துக்கும் சென்றார். இது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

வீடியோ வெளியீடு

கருணாநிதியின் கடந்த ஒன்றரை ஆண்டுகால நடவடிக்கையை தி.மு.க.வினர் நேற்று வீடியோவாக வெளியிட்டனர். அதில், அவர் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி முரசொலி அலுவலகம் சென்றது, பின்னர் அறிவாலயம் சென்றது, அவருக்கு தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டியை துரைமுருகனும், பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சினை தொலைபேசியில் மு.க.ஸ்டாலின் காட்டும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

மேலும், தனது கொள்ளுப் பேத்தியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற கருணாநிதி, நீண்ட இடைவெளிக்கு பிறகு தொண்டர்களைப் பார்த்து கையசைத்த காட்சியும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மொத்தம் மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவால், தி.மு.க.வினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.




Leave a Reply