BREAKING NEWS

கருணாநிதியின் இறுதிச்சடங்கு கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

 

அஞ்சலி

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று முன்தினம சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற மாநில முதல்-அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகைகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

பாதுகாப்பு

முக்கிய பிரமுகர்களுக்கு தனி வழியும், பொது மக்களுக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. கருணாநிதியின் உடலை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். சிலர் தடுப்புகளை தகர்த்து விட்டு சென்றனர்.

படுகாயம்

ஒரு கட்டத்தில் முக்கிய பிரமுகர்களின் பாதையில் பொதுமக்கள் புகுந்தனர். இதில் நெரிசல் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் 26 பேர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை

இந்த நிலையில் கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மக்களை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை டாக்டர்களிடம் கேட்டறிந்தார். உயர்தர சிகிச்சை அளிக்கவும் டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டார். அவருடன், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




Leave a Reply