தற்போதைய செய்திகள்
ops

கம்யூனிஸ்டு ஆளுகின்ற மாநிலங்களில் கூட ரத யாத்திரைக்கு அனுமதி:மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுவதா? மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்……

சென்னை,
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சபாநாயகர் நடவடிக்கை

தமிழகத்தில் ரத யாத்திரையை அனுமதிக்க கூடாது என்று கோரி, சட்டசபையில் நேற்று மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்து பேசினார். இந்நிலையில் தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, திமுகவினர் அனைவரையும் சபாநாயகர் அவையில் இருந்து வெளியேற்றினார்.

நல்ல நடைமுறை

இதைத் தொடர்ந்து, துணை முதல்வரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
பேரவைத் தலைவராகிய நீங்கள் மிகவும் கீழே இறங்கி, பணிவோடு எதிர்க்கட்சிகள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு வாதங்களையும் பொறுமையாகக் கேட்டு, அதற்குப் பிறகு உங்களுடைய தீர்ப்பை வழங்குகின்ற ஒரு நல்ல நடைமுறையை கடைப்பிடித்து வந்திருக்கின்றீர்கள்.

சட்டத்தின் ஆட்சி நடக்கிறது

அதை எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களும், எதிர்க்கட்சித் தலைவரும் சரியாக புரிந்துகொள்ளவில்லையோ அல்லது புரிந்தும், புரியாமல் நடந்து கொண்டிருக்கின்றார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. மிகப் பெரிய, ஒரு தமிழக சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர் இந்தப் பிரச்சினையை எடுத்துக்கொண்டு, பேச ஆரம்பித்ததிலிருந்து, தமிழகம் இன்றைக்கு அமைதிப் பூங்கா மாநிலமாக, ஜெயலலிதா எந்தளவிற்கு அரசை, சட்டம் ஒழுங்கை, சட்டத்தின்படி ஆட்சி நடத்திட வேண்டுமென்று எண்ணி ஆட்சி செய்தார்களோ, அதன்படிதான் இன்றைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கர்நாடகத்திலும் அனுமதி

இதைப் பொறுக்க முடியாமல் மு.க.ஸ்டாலின் ஏதாவது ஒரு பிரச்சினையை எழுப்பி, மக்களை திசை திருப்பி, தமிழகத்தில் அரசியல் லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், இம்மாதிரியான சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்துகின்ற முயற்சியை முன்னெடுத்திருக்கின்றார். இந்த ரத ஊர்வலம், ஐந்து மாநிலங்கள் வழியாக தமிழகத்தை வந்தடைகின்ற ஒரு சூழ்நிலை உள்ளது. அதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து மாநில அரசுகளும் அனுமதி கொடுத்துள்ளன. காங்கிரஸ் ஆளுகின்ற கர்நாடக மாநிலத்திலும் கூட அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின்றது.
சிந்தித்து பார்க்கவும்
கம்யூனிஸ்டு ஆளுகின்ற மாநிலங்களில் கூட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் எல்லாம் ஊர்வலம் வந்து, அமைதியாக நடைபெற்றிருக்கின்றது. இங்கே காங்கிரஸ்காரர்களும், அவர்களோடு இணைந்து, எழுந்து கோஷம் போடுகின்ற ஒரு சூழலை ஏற்படுத்துவது, காங்கிரஸ் கட்சிக்கு உகந்ததுதானா என்பதை நீங்கள் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நீக்க வேண்டும்

இன்றைக்கு நடைபெறும் சூழ்நிலையை நீங்கள் சொல்லுங்கள். இந்த ரத யாத்திரையின்போது, மதக் கலவரத்தைத் தூண்டுகின்ற வார்த்தைகளோ, இங்கே வாழுகின்ற மக்களைப் பிரித்தாளுகின்ற சூழ்நிலையை ஏற்படுத்துகின்ற வார்த்தைகளோ இருந்தால், தமிழக அரசு அதைக் கட்டுப்படுத்தி, தடுத்து நிறுத்தும். ஸ்ரீ ராமதாசா மிஷன் யூனிவர்சல் சொசைட்டி என்கிற ஒரு அறக்கட்டளை இந்த ஊர்வலத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டும் என்று ஸ்டாலின் முயற்சிக்கிறார். அவர் பேசிய முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை, வன்முறையைத் தூண்டுகிற விதமாக இது இருக்கின்ற காரணத்தினால், சபாநாயகர், அவை குறித்த முழுமையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.

பேரவைத் தலைவர் அவர்களே, நீங்கள் மிகவும் பொறுமையாக 25 நிமிடங்கள், அவர்களுக்கு (திமுக எம்.எல்.ஏ.களுக்கு)எவ்வளவோ அறிவுரைகள் சொல்லியும் கேட்காமல் இது மாதிரியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அவர்களை மீண்டும் நீங்கள் அழைத்து, புத்திமதி சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.




Leave a Reply