தற்போதைய செய்திகள்
palanisamy-24-1503517768

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட,கன்னியாகுமரிக்கு ரூ.26 கோடி நிவாரண உதவி பேரவையில் முதல்வர் தகவல்….

சென்னை, ஜன.10-
ஓகி புயலால் பாதித்த கன்னியாகுமரியில் 26 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் பேசுகையில் குறிப்பிட்டார்.

மனுவின் முழுவிவரம்

சட்டசபையில் நேற்று, ஓகி புயல் நடவடிக்கை குறித்து அரசு எடுத்த நடவடிக்கை என்று எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து கூறியதாவது:

ஒகி புயலினால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு, கீழ்க்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பிரதமர் மோடியிடம் கொடுத்தேன். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 747 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும்.

தற்போது பேரிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும். குறிப்பாக, உயிரிழப்பிற்கு ரூபாய் 4 லட்சத்திலிருந்து ரூபாய் 10 லட்சமாகவும், ஊனமடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தவும், வாழை மரங்களுக்கு எக்டேர் ஒன்றுக்கு 13,500-ரூபாயிலிருந்து 1,25,000- ரூபாயாகவும், ரப்பர் மரங்களுக்கு எக்டேர் ஒன்றுக்கு 18,000/-ரூபாயிலிருந்து 2,50,000/- ரூபாயாகவும் உயர்த்த வேண்டும்.

90 சதவீத மானியம்

புயல், காற்று மற்றும் மழையினால் பாதிக்கப்படும் உயர் அழுத்த மின்விநியோக கட்டமைப்பு, மின் மாற்றிகள், துணை மின்நிலையங்கள் மற்றும் 11 கிலோவோல்ட்டுக்கு அதிகமான உயர் மின் அழுத்த பாதைகள் ஆகியவற்றிற்கும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி அளிக்க வேண்டும்.மத்திய அரசின் 90 சதவிகித மானியத்துடன், 1500 உயர் மின்அதிர்வெண் கம்பியில்லா தொலை தொடர்பு சாதனங்கள் வழங்கவும், தமிழ்நாட்டிலுள்ள கடலோரங்களில் உயர்மின் அதிர்வெண் கட்டுப்பாட்டு அறைகளை அமைக்கவும், உயர்மின் அதிர்வெண் சேனல்களை உபயோகிக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

மீனவர்களுக்கு அவ்வப்போது வானிலை பற்றிய அறிவிப்புகளை தமிழில் தெரியப்படுத்த பிரத்யேக செயற்கை கோள் ரேடியோ அலைவரிசை ஒன்றினை உடனடியாக அமைக்க வேண்டும்.

நிரந்தர தீர்வு 

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு, குறிப்பாக கன்னியாகுமரி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண தொலைதொடர்பு வசதி, மீன் பதப்படுத்தும் பூங்கா போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும். மேலும், கடல் அரிப்பினை தடுக்கும் பொருட்டு, கடல் அலைதடுப்புச் சுவர்கள் அமைக்க வேண்டும்.

இப்பணிகளுக்கென 4,218 கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஒகி புயலினால் ஏற்பட்ட சேதங்களுக்கான மீட்பு, நிவாரணம் மற்றும் நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 9,302 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் உள்ளிட்டவை ஆகும்.

14 மீனவர்கள் உயிரிழப்பு

‘ஒகி’ புயலால் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தில் 8.1.2018 வரை அரசால் எடுக்கப்பட்ட பின்வரும் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளது:

‘ஒகி’ புயலின்போது மீன்பிடிக்க கடலுக்குச் சென்று உயிரிழந்த 14 மீனவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக 2 கோடியே 80 லட்சம் ரூபாய். ‘ஒகி’ புயலினால் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளினால் உயிரிழந்த 14 மீனவர் அல்லாத நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக 1 கோடியே 40 லட்சம் ரூபாய்.

30 ஆயிரம் குடும்பங்கள்

‘ஒகி’ புயலின் போது மரம் விழுந்தது, மின் கம்பங்கள் சாய்ந்தது போன்ற காரணங்களால் காயமடைந்த 20 நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், சிறு காயம் அடைந்த 7 நபர்களுக்கு தலா 12 ஆயிரத்து 700 ரூபாயும், 2 நபர்களுக்கு தலா 4 ஆயிரத்து 300 ரூபாயும் நிவாரண உதவியாக 10 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய்.30 ஆயிரத்து 778 மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித் தொகையாக தலா 5 ஆயிரம் ரூபாயாக மொத்தம் 15 கோடியே 38 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 1,524 மலைவாழ் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக 76 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். முழுவதுமாக சேதமடைந்த 1,096 குடிசைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும் பகுதியாக சேதமடைந்த 5,990 குடிசைகளுக்கு தலா 4 ஆயிரத்து 100 ரூபாயும் என நிவாரணமாக மொத்தம் 3 கோடியே 39 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கால்நடைகள்

சேதமடைந்த 63 கைத்தறி மூலப்பொருட்களுக்கும், 31 உபகரணங்களுக்கும் தலா 4 ஆயிரத்து 100 ரூபாய் நிவாரணமாக மொத்தம் 3 லட்சத்து 85 ஆயிரத்து 400 ரூபாய். காணாமல் போன 234 மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித் தொகையாக தலா 5 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்.

‘ஒகி’ புயலின் போது இம்மாவட்டத்தில் உயிரிழந்த 24 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாயும், 2 காளை மாடுகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், 30 கன்றுகளுக்கு தலா 16 ஆயிரம் ரூபாயும்,149 ஆடுகளுக்கு தலா 3 ஆயிரம் ரூபாயும், கோழி போன்ற 7450 பறவைகளுக்கு தலா 100 ரூபாயும் என மொத்தம் 7,655 உயிரினங்களுக்கு 24 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரிக்கு மட்டும்

‘ஒகி’ புயலின் போது கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, பிற மாநிலங்களில் கரை ஒதுங்கி தமிழ்நாட்டிற்கு திரும்பி வருவதற்கான உணவுப் பொருள் செலவினமாக 31 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயும், படகுகள் மூலம் சொந்த ஊருக்கு திரும்பி வருவதற்கான எரிபொருள் செலவினமாக 2 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 800 ரூபாயும் என மொத்தம் 2 கோடியே 52 லட்சத்து 9 ஆயிரத்து 800 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.ஆக மொத்தம் 26 கோடியே 38 லட்சத்து 15 ஆயிரத்து 700 ரூபாய் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

தொகுப்புத் திட்டம்

பாதிக்கப்பட்ட வாழை, ரப்பர் மரங்கள் மற்றும் கிராம்பு ஆகிய தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு முதற்கட்ட கணக்கெடுப்புப் பணி முடிவுற்றதும், வாழ்வாதாரத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்தேன். அதன்படி, வாழை மரங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், எக்டேருக்கு 13,500 ரூபாயும், சாதாரண முறை சாகுபடிக்கு எக்டேருக்கு 35,000 ரூபாயும், திசு வளர்ப்பு சாகுபடி முறைக்கு எக்டேருக்கு 50,000 ரூபாயும் ஆக மொத்தம் பாதிக்கப்பட்ட வாழைப் பயிருக்கு எக்டேருக்கு 48,500 முதல் 63,500 ரூபாய் வழங்கவும், ரப்பர் மரப் பயிருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 18,000 ரூபாயும், மறுசாகுபடி செய்யவும், ஊடுபயிராக வாழை அல்லது அன்னாசி சாகுபடி செய்ய எக்டேருக்கு 50,000 ரூபாயும், தேனீ வளர்ப்பு முறையினை ஊக்குவிக்க 32,000 ரூபாயும் ஆக மொத்தம் எக்டேருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும், கிராம்பு பயிரினைப் பொருத்தவரை, மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 18,000 ரூபாயும் மாநில நிதியின் கீழ், 10,000 ரூபாயும் ஆக மொத்தம் எக்டேருக்கு 28,000 ரூபாயும் வழங்க உத்தரவிட்டு, முதன் தவணையாக, மாநில நிதியிலிருந்து 3 கோடியே 56 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிக்கப்பட்டு 29.12.2017 அன்று ஆணை வழங்கப்பட்டது.

ஆகவே, அம்மாவின் அரசு துரிதமாக, வேகமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளது என்பதை இந்த அவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பயிர் சேதங்களுக்கு ரூ.11 கோடி

‘‘பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான கணக்கெடுப்புப் பணி முழுவதுமாக முடிவுற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 5,468 எக்டர் பரப்பில் தோட்டக் கலைப் பயிர்களும், 537 எக்டர் பரப்பில் வேளாண்மை பயிர்களும் ஆக மொத்தம் 6005 எக்டர் பரப்பிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 489 எக்டேரிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் 131 எக்டேரிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மாநில பேரிடர் நிவாரண நிதி வரையறையின்படி 33 சதவீதத்திற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்ட பல்வேறு பயிர்களுக்கு உரிய இடுபொருள் நிவாரணம் கணக்கிடப்பட்டு, இந்த 3 மாவட்டங்களுக்கும் தோட்டக் கலை பயிர்களுக்கு 10 கோடியே 20 லட்சம் ரூபாயும், வேளாண் பயிர்களுக்கு 79 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 10 கோடியே 99 லட்சம் ரூபாய் கணக்கிடப்பட்டு, விரைவில் அதற்கான அரசாணை வெளியிட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் நேற்று தெரிவித்தார்.
Leave a Reply