தற்போதைய செய்திகள்
congress 1

ஒரே நேரத்தில் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல் நடத்த எதிர்ப்பு-மின்னணு எந்திரத்துக்குப் பதிலாக வாக்குச் சீட்டு முறை காங்கிரஸ் தேசிய மாநாட்டில் தீர்மானம்…

புதுடெல்லி,

சட்டசபை, நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குப்பதிவின்போது மின்னணு எந்திரங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

84-வது மாநாடு

காங்கிரஸ் கட்சியின் 84-வது தேசிய மாநாடு நேற்று டெல்லியில் தொடங்கியது. இரு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு, கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்துப் பேசினார்.

அப்போது அவர், வெறுப்புணர்வை பரப்பி, பா.ஜனதா மக்களை பிளவுபடுத்தவதாக கடும் தாக்குதல் தொடுத்தார். காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றபின் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும்.

சோனியா ஆவேசம்

சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-அமைச்சர்கள் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் ஆவேசமாக பேசிய சோனியா காந்தி, பிரதமர் மோடியின் ஏமாற்று வேலையை தோலுரிப்போம் என கூறினார்.

மீண்டும் வாக்குச் சீட்டு முறை

இந்த மாநாட்டில் பல்வேறு அரசியல் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, சட்டமன்ற-நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குப் பதிவுக்கு மின்னணு எந்திரத்துக்குப் பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், தேசிய அளவில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும் தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளது. இதற்கான தீர்மானத்தை மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கல் செய்தார்.

‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’

‘‘தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் உலகின் பெரிய ஜனநாயக நாடுகளில் உள்ளதுபோல், வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்’’ என, அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடியும், பா.ஜனதாவும் ‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ (நாடு முழுவதும் சட்டமன்றம்-நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது) என்ற திட்டத்தை மிகத் தீவிரமாக வலியுறுத்தி வரும் நிலையில், நேற்றைய காங்கிரஸ் மாநாட்டில் அந்த திட்டத்தை முற்றிலும் நிராகரித்து மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும், நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பா.ஜனதாவை வீழ்த்த வியூகம்

*அடுத்த ஆண்டு (2019) நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வீழ்த்துவதற்காக ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகளுடன் கலந்து பேசி, பொதுவான செயல்திட்டம் ஒன்றை வகுப்பதற்காக நடைமுறைக்கு ஏற்ற அணுகுமுறையை கடைப்பிடிப்பது என்று, மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சி தாவல் விவகாரம்

*காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை பா.ஜனதா ‘வலை வீசி’ தங்கள் கட்சிக்கு இழுத்துவரும் சவாலை சமாளிப்பதற்காக, கட்சி தாவுகிறவர்களுக்கு 6 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானமும் மாநாட்டில் கொண்டு வரப்பட்டது.

*பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் ‘நயவஞ்சக, பிளவுபடுத்தும்’ திட்டத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. அரசியல் சட்டத்தில் மக்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படுவதையும், சுதந்திரம் மற்றும் பேச்சுரிமையை நசுக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை காங்கிரஸ் எதிர்க்கும் என, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதிகார துஷ்பிரயோகம்

*மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை குறி வைத்து மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் துன்புறுத்தி வழக்கு தொடரும் நடவடிக்கையை கண்டித்து மற்றொரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

*அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*தலித், சிறுபான்மையோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகளை சுட்டிக்காட்டியதுடன், பா.ஜனதா ஆட்சியில் அவர்களுடைய பாதுகாப்பு மற்றும் சமூக நீதி சீர்குலைந்து விட்டதாகவும் காங்கிரஸ் தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

*நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற ஊடகங்கள் ‘சம நிலை’யை கடைப்பிடிக்க வலியுறுத்தியும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Leave a Reply