தற்போதைய செய்திகள்

ஒரு லட்சம் மகளிகருக்கு ‘அம்மா ஸ்கூட்டர்’ தமிழக பட்ஜெட்டில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு…….

சென்னை,
தமிழக பட்ஜெட்டில் தாமிரபரணி -நம்பியாறு இணைப்பு திட்டம், அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உழைக்கும் மகளிருக்கான ‘அம்மா இருசக்கர வாகன மானிய நிதியுதவித் திட்டத்திற்காக 2018-2019-ம் ஆண்டிற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2018-2019-ம் ஆண்டிற்கான பட்ஜெட் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தொட்டில் குழந்தை திட்டம்
‘தொட்டில் குழந்தை திட்டம்’, ‘பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்’, போன்ற இந்த அரசின் முன்னோடித் திட்டங்கள், பெண் சிசுக்கொலை மற்றும் பெண்குழந்தை கருக்கலைப்பு போன்றவற்றைக் குறைப்பதற்கு கணிசமான பங்களித்திருக்கின்றன. 2018-2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டங்களுக்காக 140.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருமண உதவித் திட்டங்களின் கீழ், திருமாங்கல்யத்திற்காக எட்டு கிராம் தங்கம் மற்றும் பட்டதாரி அல்லாதவர்களுக்கு 25,000 ரூபாயும், பட்டதாரி அல்லது பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. 2018-2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், அனைத்து திருமண உதவித் திட்டங்களுக்காக 724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உழைக்கும் மகளிர்
உழைக்கும் மகளிருக்கான ‘அம்மா இருசக்கர வாகன மானிய நிதியுதவித் திட்டம்’, முதலமைச்சர் முன்னிலையில் பிரதமர் அவர்களால், கடந்த 24.02.2018 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதன்படி ஒரு பயனாளிக்கு இருசக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதத் தொகை அல்லது அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை மானியமாக வழங்கப்படுகிறது. 2017-2018-ம் ஆண்டில், ஒரு லட்சம் பயனாளிகளில் 5,306 மகளிருக்கு மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் ஆண்டில் எஞ்சியுள்ள பயனாளிகளுடன் கூடுதலாக ஒரு லட்சம் பயனாளிகள் இத்திட்டத்தில் பயனடைவர். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சத்துணவு திட்டம்
2018-2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்திற்கு 1,747.72 கோடி ரூபாயும், ‘ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு’ 2,146.30 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ‘ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ், 100.71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2018-2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சமூக நலத் துறைக்காக 5,611.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply