தற்போதைய செய்திகள்

‘ஒகி’ புயலில் மாயமான 177 மீனவர் குடும்பங்களுக்கு-தலா ரூ.20 லட்சம் நிதி உதவி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்….

சென்னை,

‘ஒகி’ புயலின் போது கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 177 மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா 20 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 35 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

நவம்பரில் தாக்குதல்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை, “ஒகி” புயல் தாக்கியது.

இந்த தாக்குதலில் மீன்பிடி படகுகள், உபகரணங்கள் பெருத்த சேதத்திற்கு உள்ளானது. அதோடு மட்டுமன்றி, மீன்பிடிப்பிற்கு ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடி படகுகளுடன் சென்ற மீனவர்கள் காணாமல் போனார்கள்.

மீட்பு நடவடிக்கை

மீன்பிடிக்கச் சென்று, “ஒகி” புயலினால் கரை திரும்ப முடியாமல் போன மீனவர்களை மீட்க தமிழக அரசு கடற்படை, விமானப் படை மற்றும் இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

27 மீனவர்கள் பலி

இந்த நடவடிக்கையின் மூலம் 3,506 மீனவர்கள் மற்றும் அவர்களது 24 நாட்டுப் படகுகள், 264 மீன்பிடி விசைப்படகுகள் மீட்கப்பட்டன. தமிழக அரசால் மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஒகி புயலினால் 27 மீனவர்கள் உயிரிழந்தனர்.

மேலும், கடலில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 177 மீனவர்கள் காணாமல் போனார்கள்.

தலா ரூ.20 லட்சம்

இந்த புயலினால் உயிரிழந்த 27 தமிழ்நாட்டு மீனவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, நிவாரண உதவித் தொகை தலா 20 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர்களால் ஏற்கனவே வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட முதல்வர் உத்தரவின் பேரில் வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் உயர் மட்ட குழுவும் அமைக்கப்பட்டது.

177 பேருக்கு நிதி உதவி

அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில், காணாமல் போன கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த 139 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 3 மீனவர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த 15 மீனவர்கள், கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த 19 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 1 மீனவர், என மொத்தம் 177 மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகை தலா 20 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 35 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை கோட்டையில் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், டி. ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Leave a Reply