தற்போதைய செய்திகள்

ஐ.பி.எல் பிளே ஆப் போட்டிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்

ஐ.பி.எல் பிளே ஆப் போட்டிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்
புதுடெல்லி, மே 10-

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல்

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல்-20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டு, ஏப்ரல் மாதத்தில் துவங்கிய 11-வது ஐ.பி.எல் போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. வழக்கமாக இரவு 8 மணிக்கு தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகள் முடிவடைவதற்கு நள்ளிரவு 12 மணி வரை ஆகிறது. இதனால், ரசிகர்கள் போட்டி முடிந்து வீடு திரும்புவது உள்பட சில பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

பிளே ஆப் சுற்று

ரசிகர்களின் கஷ்டத்தை மனதில் கொண்டு ஐ.பி.எல் 2018 பிளே ஆப் சுற்றுகளின் நேரத்தை ஐ.பி.எல் நிர்வாகம் மாற்றியுள்ளது. ஐ.பி.எல் சேர்மன் ராஜீவ் சுக்லா இது பற்றி தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறுகையில், “ பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் மாலை 7 மணிக்குத் தொடங்கும், 8 மணி போட்டிகள் முடிவடைய கிட்டத்தட்ட நள்ளிரவு 12 மணி வரை ஆவதால் தொலைக்காட்சி நேயர்கள், மைதானப் பார்வையாளர்கள் ஆகியோரின் மறுநாள் காலை பணிகளைக் கருத்தில் கொண்டு போட்டியை 7 மணிக்கு மாற்றம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இறுதிப்போட்டி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் சுற்று போட்டிகள் மே 22 மற்றும் 25-ந் தேதிகளிலும் இறுதிப்போட்டி 27-ந் தேதியும் நடைபெற உள்ளது. முதலில் பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் புனேயில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் காவிரிப் பிரச்சினையால் ஐ.பி.எல் எதிர்ப்புகள் கிளம்ப சென்னை போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன. இதனையடுத்து பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.




Leave a Reply