BREAKING NEWS

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகள் தமிழில் எழுதலாம்..!

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக ஒரு திறமை மிக்க மனித வளத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் ஐ.ஐ.டி (Indian Institutes Of Technology) நிறுவனம்.  இந்திய நாடாளுமன்றத்தினால் நிறுவப்பட்டு நாட்டின் இன்றியமையாத கல்விக் கழகங்கள் என ஐந்து ஐ.ஐ.டி உயர் கல்வி நிறுவனங்களை அன்றைய மத்திய அரசின் முதல் கல்வித்துறை அமைச்சர் அபுல்கலாம் ஆசாத் அறிவித்தார்.

டெல்லி, மும்பை, கராக்பூர், கான்பூர் மற்றும் சென்னை ஆகிய ஐந்து இடங்களில்தான் முதன் முதலில் இந்த ஐ.ஐ.டி உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.  தற்போது இந்தியா முழுமைக்கும் 13 ஐ.ஐ.டி நிறுவனங்களாக வளர்ந்து நிற்கின்றன.  இந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு நுழைவுத் தேர்வு முறை இந்தியா முழுமைக்கும் நடத்தப்படுகிறது.  இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் அட்டவணையில் 18 மொழிகள் இருக்கின்றன.  இந்த 18 மொழிகளிலும் நாடாளுமன்றத்தில் பேசலாம், பதவி ஏற்கலாம்.

ஆனால். இதே நாடாளுமன்றத்தால் முதன் முதலில் தொடங்கப்பட்ட ஐ.ஐ.டி உயர் கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்றால், மூன்று மொழிகளில்தான் எழுத முடியும் என்கிற நிலைமை இருந்தது.  இந்தி, தமிழ், குஜராத்தி இந்த மொழிகளில் புலமை படைத்தவர்கள்தான் சுலபமான முறையில் நுழைவுத் தேர்வு எழுத முடியும் என்கிற அவல நிலையை தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மாற்றி அமைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தடவை நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வில் தற்போது தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட 11 மொழிகளில் எழுதலாம் என அறிவித்துள்ளது.  2020-ம் ஆண்டிற்கான தேர்வு வினாத்தாள்களை ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு விட்டதால், 2021 முதல் இந்த 11 மொழிகளிலும் எழுதலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.  கேட்(GATE) என்னும் இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் பட்டதாரி பொறியியல் மற்றும் பொறியியல் பட்ட மேற்படிப்பு(JMET, CEED) ஐ.ஐ.டியில் பயில முடியும்.  பொறியியல் பட்டப்படிப்பிற்கு சுமார் 15 ஆயிரத்து 500 மாணவர்களும், பட்ட மேற்படிப்பிற்கு 12 ஆயிரம் மாணவர்களும் ஒவ்வொரு ஆண்டும் இந்த நுழைவுத் தேர்வினை எதிர்கொண்டு எழுதி வருகின்றனர்.  என்னதான் ஆங்கில வழிக்கல்வி பயின்று இருந்தாலும் அவரவர் தாய்மொழியில் தேர்வினை எதிர்கொள்வது என்பது ஒரு தன்னம்பிக்கையைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அந்த வகையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பை இருகரம் நீட்டி வரவேற்கலாம்.  இதே வழியில் மத்திய அரசு நடத்தும் வங்கித் தேர்வு, ரயில்வே தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளும் குறிப்பாக முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுகளை அவரவர் தாய்மொழியில் நடத்த முன்வர வேண்டும்.  குறைந்தபட்சம் தேசிய மொழிகளின் அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் தேர்வுகள் நடத்துவதற்கும் முயற்சிகள் செய்ய வேண்டும்.  அத்துடன் மத்திய அரசு அலுவலகங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் இயங்கி வருகின்றன.  வங்கித் துறைகள் தொடங்கி அஞ்சல் துறை வரையிலும் அந்தந்த மாநில மொழிகளில் இயங்குவதுதான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிற இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதாக அமையும்.

அதன் தொடக்கமாக தற்போது ஐ.ஐ.டி உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ் உள்ளிட்ட 11 மொழிகள் இடம் பெற்றுள்ளன.  மேலும் இந்த உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றுவதில்லை என்கிற குறைபாடுகளும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.  சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டு முறையினையும் ஐ.ஐ.டி நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழிவகை செய்தால் நலமாக இருக்கும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *