தற்போதைய செய்திகள்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு:கார்த்தி சிதம்பரத்துக்கு, டெல்லி உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்….

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ரூ.10 லட்சம் பிணைத் தொகையாக செலுத்தவும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

திகார் சிறையில்

இது தொடர்பான வழக்கில், கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் 29-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நான்கு முறை அவரை காவலில் எடுத்து விசாரிக்க பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது.

டெல்லியில் தீவிரமாக விசாரிக்கப்பட்ட கார்த்தியை மும்பை அழைத்துச் சென்றும் சி.பி.ஐ விசாரித்தது. இதனை அடுத்து, தற்போது அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய காவல் 24-ந்தேதியுடன் (இன்று) முடிவடைகிறது.

நிபந்தனை ஜாமீன்

இதற்கிடையே, தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவர் ஜாமீனில் வெளியே வந்தால் அவருக்கு எதிரான ஆதாரங்களை அழித்து விடுவார் என ஜாமீனுக்கு சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

கடந்த 16-ம் தேதி ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு நீதிபதி நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

பாஸ்போர்ட் ஒப்படைப்பு

கார்த்தி சிதம்பரம், ஜாமீனுக்காக பிணைத் தொகையாக ரூ.10 லட்சம் செலுத்தவும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும், வங்கிக் கணக்குகளை அவர் மூடுவதற்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார்.
Leave a Reply