BREAKING NEWS

“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு

மோடி ஏழைகளைப் பற்றி சிந்திக்கிறாரா? தேர்தலுக்காகவே அடிக்கடி தமிழகத்திற்கு அவர் வருகிறார் என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது:-

கூட்டாட்சி

நாடாளுமன்றத் தேர்தல் மோடி ஆட்சிக்கு விடை கொடுக்கிற தேர்தலாக அமைய வேண்டும். மத்தியில் சர்வாதிகார ஆட்சி. மாநிலத்தில் உதவாக்கரை ஆட்சி. இரண்டு ஆட்சிகளை அப்புறப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட நிலையிலும் உங்களோடு இருக்கக்கூடியவர்கள் நாங்கள்.

ராகுல்காந்தி வெளியிட்ட தேர்தல் அறிக்கை மக்களின் அடிப்படை பிரச்னைகளை உணர்ந்து, பயன்படக்கூடிய வகையில் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மத்திய, மாநில உறவுகள் குறித்து கூட்டாட்சி தத்துவத்தை பற்றி தெளிவாக சொல்லியிருக்கிறார். மாநிலத்தில் உரிமைகளை பெற்றாக வேண்டும். மத்தியில் கூட்டாட்சி அமைந்திட ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும்.

தேர்தல் அறிக்கையில் முரண்பாடு

தி.மு.க. தேர்தல் அறிக்கை ஹீரோ. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ. பி.ஜே.பி தேர்தல் அறிக்கை ஜீரோ. அ.தி.மு.க., பி.ஜே.பி., பா.ம.க. மூன்று தேர்தல் அறிக்கையையும் முரண்பாட்டின் மொத்த உருவங்கள். காஷ்மீர் விவகாரம் குறித்து பி.ஜே.பி சொல்வதை இவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்களா? நீட் தேர்வு, 7 பேர் விடுதலை இவற்றை பி.ஜே.பி ஏற்றுக் கொள்ளத் தயாரா? அ.தி.மு.க. கூட்டணி கொள்கை கூட்டணி அல்ல.

ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்? அ.தி.மு.க. 37 எம்.பி.க்கள் நாட்டிற்கு என்ன செய்திருக்கிறார்கள்? தமிழ்நாட்டிற்கு என்ன பயன் கிடைத்திருக்கின்றது? இந்தியா பக்கமே திரும்பாத மோடி, தேர்தல் காரணத்தால் தமிழ்நாட்டுப் பக்கம் அடிக்கடி வருகிறார். அவர் வெளிநாடு வாழ் பிரதமர். இந்தத் தேர்தலை பயன்படுத்தி திடீர் திடீரென்று வாரத்திற்கு ஒருமுறை வருகின்றார். ராகுல் காந்தி மிகவும் துணிச்சலாக எதைப்பற்றியும் கவலைப்படாமல், மோடி செய்த ரபேல் ஊழலை முதன்முதலில் அவர்தான் வெளிப்படுத்தினார்.

ராகுல் காந்தி வருடத்திற்கு 72,000 ரூபாய் அறிவித்திருக்கிறார். வறுமை ஒழிப்புத்திட்டம் என்ற பெயரில் நாங்கள் செயல்படுத்த போகிறோம் என்று அறிவித்திருக்கிறார். ஏழையாக இருந்த மோடி ஏழையைப் பற்றியா சிந்திக்கிறார்? விஜய மல்லையா, லலித் மோடி, பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் இருக்கிறார். .நாட்டை பாதுகாக்க காவலாளியாக இருப்பேன் என்கிறார். யாருக்கு காவலாளியாக இருக்கிறார்?

இவ்வாறு அவர் பேசினார்.




Leave a Reply