தற்போதைய செய்திகள்

‘என் தந்தை கொலையாளிகளை நானும், பிரியங்காவும் மன்னித்துவிட்டோம்’ ராகுல் காந்தி உருக்கம்…..

சிங்கப்பூர்,

‘‘என் தந்தை ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை நானும், எனது சகோதரி பிரியங்காவும் முழுமையாக மன்னித்துவிட்டோம்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உருக்கமாகத் தெரிவித்தார்.

கலந்துரையாடல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக, சிங்கப்பூரில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவரிடம் ‘‘உங்கள் தந்தையை கொலை செய்தவர்களை நீங்களும் உங்கள் சகோதரியும் மன்னித்து விட்டீர்களா?’’ எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி அளித்த பதில் வருமாறு:-

கொல்லப்படுவது தெரியும்

அரசியலில் நாம் எடுக்கும் தவறான முடிவுகள் நம்மை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் என்பது எனக்கு நன்கு தெரியும். அதன் காரணமாகவே, எனது தந்தையும் கொல்லப்படுவார் என்பது தெரியும்.

எனது பாட்டி இந்திரா காந்தி கொல்லப்பட்டதுபோலவே அவரும் கொல்லப்படுவார் என்பது தெரியும். எனக்கு 14 வயதாக இருக்கும் போது, என் பாட்டி சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழக தேர்தல் பிரசாரத்தின்போது

என்னுடன் பாட்மிண்டன் விளையாடிவர்களே எனது பாட்டியை கொலை செய்தனர். அதன்பின் எனது தந்தை தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்யவந்தபோது கொல்லப்பட்டார்.

இந்த இரு சம்பவத்துக்கு பின், என்னைச் சுற்றி காலையும், இரவும் 10 முதல் 15 பேர் காவல் காத்துக்கொண்டு இருக்கும் சூழலில்தான் நான் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மிகுந்த துணிச்சல்

என்னைப் பொறுத்தவரை இந்த பாதுகாப்பு என்பது முன்னாள் பிரதமர் மகன், பேரன் என்பதால் அல்ல, சிறப்பு சலுகையும் இல்லை. இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள மிகுந்த துணிச்சல் வேண்டும்.

அரசியலில் நாம் தவறான சக்திகளின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட்டு, அதற்கு துணையாக இருந்தால், நிச்சயம் கொல்லப்படுவோம். இது தெளிவாக தெரிந்துவிட்டது.

துயரத்தில் துடித்தோம்..

என் தந்தை கொலை செய்யப்பட்டபின் நானும், எனது சகோதரியும் மனதளவில் மிகுந்த வேதனையில் இருந்தோம். இந்த வேதனை எங்கள் இருவருக்கும் பல ஆண்டுகள் நீடித்தது, மனதளவில் சில நேரங்களில் துயரத்தில் துடித்தோம் .(இதைச் சொல்லும்போது கண்கலங்கினார்)

கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தியை தொலைக்காட்சி வாயிலாக நான் அறிந்து, அவரின் உடல் கிடத்தப்பட்டு இருப்பதையும் பார்த்தேன். அப்போது என் மனதுக்குள் இருவிதமான எண்ணங்கள் ஓடின.

பிரபாகரன் கொலையால் கவலை

முதலாவது, பிரபாகரன் கொல்லப்பட்டதை ஏன் இவ்வளவு அசிங்கப்படுத்துகிறார்கள், கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதும், இரண்டாவது, பிரபாகரனின் குழந்தைகள் என்ன ஆகப்போகிறதோ?, அவரின் குடும்பத்துக்கு என்ன கதி ஏற்படுமோ?, அவர்கள் மனிதநேயத்துடன் நடத்தப்படுவார்களா? என்ற கவலை எனக்குள் ஏற்பட்டது.

இந்த இருவிஷயங்களையும் நான் ஆழமாகப் புரிந்து கொண்டேன், இந்த இரு விஷயங்களும் என்னை மிகவும் பாதித்துவிட்டது. உடனடியாக, எனது சகோதரி பிரியங்காவை தொலைபேசியில் அழைத்தேன்.

மகிழ்ச்சி ஏற்படவில்லை

நம் தந்தையை கொன்ற பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி கேட்டதும் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். ஆனால், எனக்கு ஏன் மகிழ்ச்சி ஏற்படவில்லை. அது ஏன் என்பது தெரியவில்லை என்றேன். அவரும் என்னிடம் எனக்கும் எந்தவிதமான மகிழ்ச்சியும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.

என் தந்தையை கொலை செய்த குற்றத்தில் சிறையில் இருக்கும் 7 குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக முதல்வரும் மறைந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு முடிவு செய்தார். அப்போது காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது.

மன்னித்துவிட்டோம்

ஆனால், என்னுடைய சொந்த கருத்தை கூறுங்கள் என்றார்கள். நான் இதில் கூற முடியாது என மறுத்து, இது அரசின் முடிவு என்று தெரிவித்தேன்.

என் தந்தை கொல்லப்பட்டதை நினைத்து நானும், பிரியங்காவும் பல ஆண்டுகள் மனதுக்குள் வேதனையில் துடித்தோம். ஆனால், இப்போது, என் தந்தையை கொலை செய்தவர்களை நானும், பிரியாங்காவும் முழுமையாக மன்னித்துவிட்டோம்(சொல்லும்போது கண்கலங்கினார்)

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
Leave a Reply