தற்போதைய செய்திகள்

எந்த பிரச்சினைகளும் இல்லாமல் தான் 5 மாநிலங்களில் ராம ரதயாத்திரை வந்துள்ளது:அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் சட்டசபையில் மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்……

சென்னை,

‘‘ஐந்து மாநிலங்களில் எந்த பிரச்னையும் இல்லாமல் ராம ராஜ்ய ரத யாத்திரை கடந்துவந்துள்ளது. இதில் அரசியல் சாயம் பூசுவது சரியல்ல என்று எதிர்க்கட்சி தலைவருக்கு சொல்கிறேன். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டசபையில் விளக்கமளித்து பேசினார்.

144 தடை உத்தரவு

விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தி வரும் ரத யாத்திரையை தமிழகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று தி.மு.க. உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும், சில தமிழ் அமைப்புகளும், முஸ்லீம் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தன. இந்நிலையில், கேரளாவில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு 20-ந் தேதி (நேற்று) அந்த ரதயாத்திரை வருவதையொட்டி அந்த மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரத யாத்திரை முற்றுகையிட சென்றவர்களையும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில் நடத்தப்படும், ‘ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு’ தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என்று நேற்று தமிழக சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

முதல்வர் விளக்கம்

இதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்து பேசியதாவது:

ராமதாச மிஷன் சர்வதேச சங்கத்தின் சார்பில், ‘ராம ராஜ்ய ரத யாத்திரை’ ஒன்று கடந்த 13.2.2018-ந் தேதி அந்த சங்கத்தின் தேசியச் செயலாளர் சக்தி சாந்த ஆனந்த மகரிஷி தலைமையில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புறப்பட்டது. இந்த ரத யாத்திரை மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை கடந்து தமிழ்நாட்டிற்கு இன்று வந்துள்ளது. 20.3.2018 அன்று கேரளா மாநிலம் புனலூரிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வழியாக நமது மாநிலத்திற்குள் நுழைந்து, ராஜபாளையம், மதுரையை வந்தடைந்து, மறுநாள் 21.3.2018 அன்று ராமேஸ்வரத்தை அடைகிறது.

காவல்துறையில் புகார்

பின்னர், ராமேஸ்வரத்தில் இருந்து 22.3.2018 அன்று தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரி அடைந்து, மறுநாள் 23.3.2018 அன்று திருவனந்தபுரத்திற்கு செல்கிறது. ராம ராஜ்ய ரத யாத்திரை நமது மாநிலத்தில் வருவதற்கு சில முஸ்லீம் அமைப்பினரும், தமிழ் ஆதரவு அமைப்பினரும் மற்றும் சில அரசியல் கட்சியினரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து, அந்த ரத யாத்திரையை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று கோரி காவல் துறையினரிடம் மனுக்கள் அளித்தனர்.

5 மாநிலங்களில் எதிர்ப்பில்லை

ராமதாச மிஷன் சர்வதேச சங்கம் என்ற அறக்கட்டளை சார்பாக, இந்த ராம ராஜ்ய ரத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட ஐந்து மாநிலங்களிலும் இந்த யாத்திரைக்கு எந்தவிதமான எதிர்ப்பும் எழவில்லை. அந்த மாநிலங்களில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இதுவரை இந்த யாத்திரை கடந்து வந்துள்ளது. இந்த ரத யாத்திரை தமிழ்நாட்டிற்குள் வருவதை முன்னிட்டு சட்டம் – ஒழுங்கைப் பராமரிக்க, யாத்திரை செல்லும் மாவட்டங்களில் காவல் துறையினர் தேவையான பாதுகாப்புகளைச் செய்துள்ளனர்.

நாங்கள் பொறுத்துக் கொண்டோம்

எதிர்க்கட்சி தலைவருக்கு சொல்கிறேன், ஐந்து மாநிலத்திலே இந்த ரத யாத்திரை நடந்திருக்கிறது. இதில் அரசியல் சாயம் பூசுவது சரியல்ல. (தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்) அவர்கள் பேசும்போது எங்களுடைய உறுப்பினர்கள் அமைதியாக இருந்தார்கள். நான் பேசும்போது, தொடர்ந்து குறுக்கிடுகிறார்கள். கடுஞ்சொற்களை எல்லாம் உபயோகப்படுத்தினர். அதை எல்லாம் நாங்கள் பொறுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். இங்கே அரசியல் சாயம் பூசுவது சரியல்ல.

சம உரிமை உண்டு

தமிழகத்தை பொறுத்த வரையில் எல்லா மதத்திற்கும் சம உரிமை உண்டு. அதை யாரும் தடை செய்ய முடியாது. ஜனநாயக நாடு. இந்த மதம் – அந்த மதம் என்று வேறுபடுத்தி காட்ட முடியாது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. அந்த கடமையை கடைப்பிடித்து தான் இங்கே பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தெளிவாக தெரிகிறது

நான் ஏற்கனவே கூறியது போல, இந்த ரதம் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா எல்லாவற்றையும் கடந்து தான் வந்திருக்கிறது. மீண்டும் இங்கே முடித்து விட்டு கேரளா வழியாக தான் செல்கிறது. இதிலே எவ்வித பிரச்சனையும் எழுந்ததாக எனக்கு தெரியவில்லை. நீங்களும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் இதில் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள். அதுதான் தெளிவாக தெரிகிறது.
இவ்வாறு முதல்வர் விளக்கமளித்தார்.

கூச்சல்-குழப்பம்

ஆனால், முதல்வரின் விளக்கத்தை ஏற்காமல் தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவையில் கடும் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, திமுகவினர் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

சாலை மறியல் கைது
வெளியேற்றப்பட்ட பிறகு கோட்டைக்கு வெளியே சென்று சாலையில் அமர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மறியலில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தின்போது, ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

முன்னெச்சரிக்கையாக 121 பேர் கைது

‘‘சட்டம் – ஒழுங்கை பராமரிக்கவும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும், திருநெல்வேலி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் 121 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்தார்.




Leave a Reply