தற்போதைய செய்திகள்
trump

‘‘எங்களுக்கு வரியை குறைக்காவிட்டால் உங்களுக்கும் அதே கதி தான்’’ இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்…

வாஷிங்டன், 
இந்தியா மற்றும் சீனாவில் அமெரிக்க பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறதோ அதே வரி, இனிமேல் அமெரிக்காவிலும் விதிக்கப்படும் என அந்த நாட்டு அதிபர் டொனல்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரி விதிப்பு
அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இறக்குமதியாகும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 60 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு வந்தது. 800 சிசி வரை கொண்ட பைக்குகளுக்கு 60 சதவீதமும், 800 சிசிக்கும் மேற்பட்ட பைக்குகளுக்கு 75 சதவீத வரியும் விதிக்கப்பட்டு வந்தது.
இதனை வெகுவாக குறைக்க வேண்டும் என இந்தியாவிடம் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் இதற்கான வரி 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. இருப்பினும் முற்றிலுமாக வரியை நீக்க வேண்டும். இதை தொடர்ந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பிற்கு 25 சதவீதமும், அலுமினியத்திற்கு 10 சதவீதமும் வரி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்தியா மற்றும் சீனாவில் அமெரிக்க பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறதோ அதே வரி இனிமேல் அமெரிக்காவிலும் விதிக்கப்படும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதுகுறித்து ட்வீட்டரில் ட்ரம்ப் கூறியுள்ளதாவது:
விலை அதிகரிப்பு
‘‘அமெரிக்க கார்களுக்கு, சீனா 25 சதவீத வரி விதிக்கிறது. ஆனால் அமெரிக்காவில் சீன கார்களுக்கு 2.5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இது நியாயமான வர்த்தகம் அல்ல. இந்தியாவில் உள்ள பொருட்களுக்கும் இதே நிலை தான் உள்ளது.
இதனால் தான், சீனா மற்றும் இந்திய பொருட்கள் அமெரிக்காவில் பெருமளவு குவிந்து வருகின்றன.
அவர்கள் அமெரிக்க சந்தையை பயன்படுத்திக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம். ஆனால் அவர்கள் இந்த விஷயத்தில் விடப்பிடியாக உள்ளனர். அவர்கள் பொருட்கள் அமெரிக்காவில் விற்பனையாக தொடர்ந்து அனுமதிக்கப்படும். ஆனால் குறைந்த விலைக்கு அவர்கள் இனிமேல் விற்க முடியாது.
அவர்கள் நாடுகளில் அமெரிக்க பொருட்களுக்கு என்ன வரி வசூலிக்கப்படுகிறதோ இனிமேல், அதே வரி அமெரிக்காவிலும் வசூலிக்கப்படும். இது தொடர்பாக, இந்தியா மற்றும் சீனாவிடம் பேசி வருகிறோம். அவர்கள் நல்ல பதில் அளிப்பார்கள் என நம்புவோம்’’ எனக்கூறினார்.
Leave a Reply