BREAKING NEWS

உலக அளவில் 60 நகரங்களில் சென்னை சிறந்த நகரம் – ஜெர்மன் நாட்டு நிறுவனம் வழங்கியது.

உலக அளவில் 60 நகரங்களில் சென்னை சிறந்த நகராமாகு தேர்வு செய்யப்பட்டு பெருநகர சென்னை மாநகராட்சி “தி டிரான்ஸ்பர்மேட்டிவ் அர்பன் மொபிலிட்டி இனிஷியேட்டிவ் என்ற விருதை பெற்றுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு GIZ ஜெர்மன் நாட்டை சேர்ந்த நிறுவனம் யூரோ 2 லட்சம் மதிப்புடைய “தி டிரான்ஸ்பர்மேட்டிவ் அர்பன் மொபிலிட்டி இனிஷியேட்டிவ்” என்ற விருதை வழங்கியுள்ளது. ஜெர்மனியில் உள்ள லெய்ப்பிஸ் நகரத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வடக்கு வட்டார துணை ஆணையர் எஸ். திவ்யதர்ஷினி மற்றும் செயற்பொறியாளர் ராஜேஸ்வரி இந்த விருதை பெற்றுக் கொண்டனர்.

60 நகரங்கள் பங்கேற்பு

உலக அளவில் 60 நகரங்கள் போட்டியில் பங்கு பெற்றதில், அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 நகரங்களில் சென்னையும் ஒரு நகரமாகும். பெருநகர சென்னை மாநகராட்சி, “சென்னை மாநகராட்சி சாலையை எல்லா இயல்புகளையும் உள்ளடக்கி வடிவமைக்கும் பணி” என்கின்ற தலைப்பில் போட்டிக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தது. இதில் காந்தி நகர், அடையாரில் உள்ள சாலைகள் பாதசாரிகளுக்கு உகந்ததாகவும் மற்றும் பாதுகாப்புமிக்கதாகவும் வடிவமைத்து நிறைவேற்றும் பணி உள்ளடக்கியதாக எடுத்துரைக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நடைபாதை

இந்த பணியின் மூலம் பாதசாரிகளின் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என்றஎதிர்ப்பார்ப்புடனும், பாதசாரிகள் ஒருங்கிணைந்த கட்டமைப்பை அப்பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் வண்ணமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணியில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப நடைபாதை அமைக்கப்படவுள்ளது. மேலும், இரயில் போக்குவரத்திற்கான அணுகுவழிகள் சீர்செய்யப்படுகிறது.

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு

இப்பணியில் பாதசாரிகளும், முக்கியமாக பள்ளிச்செல்லும் மாணவர்களும் பாதுகாப்பான முறையில் நடப்பதற்கு ஏதுவான அம்சங்களை உள்ளடக்கியதாகும். இதனால் அப்பகுதியில் பாதசாரிகளின் பயன்பாட்டு முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும். மேலும், இவ்வடிவமைப்பில் பாதசாரிகளின் தேவைகள் முறையாக அறிந்து, அதற்கேற்றவாறு கவனத்துடன் கையாளப்பட்டுள்ளது.

என்னென்ன மாற்றம்

இப்பணி மேற்கொள்வதன் மூலம் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவை வருமாறு:

* நகர தெருக்களை வடிவமைப்பதற்கு ஒரு முன்மாதிரியாக அமையும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் பாதுகாப்பான முறையில் செல்வதற்கு ஏதுவாக சூழ்நிலை உருவாக்கப்படும்.

* மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கேற்ப நடைபாதை அமைக்கப்படும். காற்றில் உள்ள கார்பன் வாயுவின் நுண்துகள்கள் அளவை குறைப்பதன் மூலம் காற்று மாசுபடுவதை குறைக்கலாம்.

* பல்வேறு போக்குவரத்தை இணைக்கும் வண்ணம் கடைசி கட்ட பாதசாரிகளின் நடைபாதை அமைக்கப்படவுள்ளது.

இப்பணி பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் C40 Cities Climate Leadership Group உடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிக்கான யூரோ மதிப்பீடு 3,34,719/- ஆகும். இதில் யூரோ 2,00,000/- விருதின் நிதியிலும், மற்றவை பெருநகர சென்னை மாநகராட்சி நிதியிலும் மேற்கொள்ளப்படும். இத்திட்டமானது 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.




Leave a Reply