BREAKING NEWS

ஜோகோவிச், பெடரர், செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு ஜோகோவிச், ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளனர்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜோகோவிச் (செர்பியா) 2வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த லான்டோரேவை எதிர்கொண்டார்.

இதில் ஜோகோவிச் 6-4, 7-6 (7-3), 6-1 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனை படைத்தவரும், 3-ம் நிலை வீரருமான ரோஜர் பெடரர் 2-வது சுற்றில் 3-6, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போஸ்னியாவை சேர்ந்த ஜூமுகரை வீழ்த்தினார். முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகலிடம் முதல் செட்டை இழந்தது போலவே 2-வது சுற்றில் முதல் செட்டை பெடரர் இழந்து இருக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் நிஷிகோரி (ஜப்பான்) வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

உலகின் 8-வது வரிசையில் இருப்பவரும், 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-வது ரவுண்டில் சக நாட்டைச் சேர்ந்த கேத்ரின் மெக்னலியை எதிர் கொண்டார்.

இதில் செரீனா முதல் செட்டை 5-7 என்ற கணக்கில் தோற்றார். ஆனால் அதற்கு அடுத்த 2 செட்களில் சுதாரித்து ஆடி 6-3, 6-1 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

3-வது வரிசையில் இருக்கும் பிறிஸ் கோவா (செக்குடியரசு) 6-1, 6-4 என்ற கணக்கில் மரியம் போல் வாடேயை (ஜார்ஜியா) வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இரண்டாம் நிலை வீராங்கனையான ஆஸ்லே பேர்டி (செக்குடியரசு) 6-2, 7-6 (7-2) என்ற கணக்கில் லாரன்டேவிசை (அமெரிக்கா) வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் 5-வது வரிசையில் இருக்கும் சுவிட்டோலினை (உக்ரைன்), 10-வது வரிசையில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா), ஆகியோர் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் 2-வது சுற்றில் தோற்றார்.




Leave a Reply