BREAKING NEWS

உலகக் கோப்பை 2018 – ஸ்பெயின், டென்மார்க் வெளியேற்றம் – காலிறுதியில் ரஷியா – குரோஷியா மோதல்.


ரஷ்யாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் பல நட்சத்திர வீரர்களை தன்னகத்தே கொண்ட ஸ்பெயின் அணியும், ரஷ்ய அணியும் மோதின. இப்போட்டியில் ஆரம்பம் முதலே ரஷ்ய வீரர்களின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் சிறப்பாக இருந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.

காலிறுதியில் ரஷியா

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இறுதியாக, பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது.

திரிலிங்கான பெனால்டி ஷூட்-அவுட் ஆட்டத்தின் முடிவில் ரஷிய அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.

குரோஷியா – டென்மார்க்

இதைத் தொடர்ந்து, நாக்-அவுட்டின் இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியா – டென்மார்க் அணிகள் மோதின. இப்போட்டியிலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே டென்மார்க் அணியின் மதியாஸ் ஜோர்ஜென்சன் முதல் கோல் அடித்து தனது அணிக்கு வலு சேர்த்தார்.

பதிலடி கோல்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் குரோஷியா அணி வீரர் மரியோ மண்டூகிக் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலை அடைந்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் குரோஷியா – டென்மார்க் அணிகள் 1-1 என சமனிலை வகித்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

பெனால்டி ஹூட்

இறுதியாக, பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது. இதில் டென்மார்க் அடித்த முதல் வாய்ப்பை கோலை குரோஷியா கோல் கீப்பர் தடுத்தார். அடுத்து குரோஷியா அடித்த கோலையும் டென்மார்க் கோல் கீப்பர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, இரண்டாவது வாய்ப்பை டென்மார்க் கோலாக மாற்றியது. இதனால் 1-0 என முன்னிலை வகித்தது. குரோஷியா இரண்டாவது வாய்ப்பை கோலாக மாற்றியதால் 1-1 என சமநிலை அடைந்தது.

சமநிலை

டென்மார்க் மூன்றாவது வாய்ப்பை கோலாக மாற்றியதால் 2-1 என முன்னிலை பெற்றது. குரோஷியாவும் அடுத்த வாய்ப்பை கோலாக மாற்றியது. இதனால் இரு அணிகளும் 2-2 என சமநிலை பெற்றன. டென்மார்க் அணியின் 4வது வாய்ப்பை குரோஷிய அணி கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார். குரோஷியா அணியின் 4வது வாய்ப்பையும் கோல் கீப்பர் தடுத்ததால் சமநிலை நீடித்தது.

காலிறுதியில் குரோஷியா

இதைத் தொடர்ந்து, டென்மார்க் அணியின் கடைசி வாய்ப்பை குரோஷியா கீப்பர் தடுத்து விட்டார். இதனால், குரோஷியா அணி தனது கடைசி வாய்ப்பை கோலாக மாற்றி 3-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது.




Leave a Reply