BREAKING NEWS

உயிர் பிரச்சினையைப் பேசாமல் எதைப் பேசுவது? பிரேமலதாவுக்கு சீமான் கண்டனம்

உயிர் பிரச்சினையைப் பேசாமல் எதைப் பேசுவது என்று பிரேமலதாவின் பேச்சுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரேமலதாவுக்கு கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ”விழாக்களில் வழி நெடுக பேனர்கள் வைப்பது தவறு. வாகன ஓட்டி சுபஸ்ரீ மீது பேனர் விழுந்து மூடியது, லாரி ஓட்டுநர் வெறும் பேனர்தானே என்று நினைத்து லாரியை ஏற்றிவிட்டார். அவர் மீதும் பேனர் அச்சிட்டவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் பேனரை வைத்தவர் மீது நடவடிக்கை இல்லை. இதை விதி என்று சொல்லமுடியாது. அரசின் சதி; சூழ்ச்சி. தனது கட்சிக்காரரைக் காப்பாற்றச் செய்யும் முயற்சி. கூட்டணியில் இருப்பதால் ஒருவர் (பிரேமலதா) விதி என்கிறார். இது உயிர் பிரச்சினை. இதைப் பேசாமல், கட்சிகள் எதைப் பேசும்? நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், தாமதம் ஏன்? உடனடி நடவடிக்கை எடுத்தால் தகுதிவாய்ந்த மற்றொரு மாணவருக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த விவகாரம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தெரியாது என்று கூறியிருப்பது பொறுப்பற்ற பதில்.

பெரிய கூட்டம் கூடினால் பயம்

விஜய் நியாயமான கோரிக்கைகளையே முன்வைத்திருக்கிறார். என் பேனரைக்கூட கிழித்துக்கொள்ளுங்கள், ஆனால் ரசிகர்களைத் தாக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டது, ரசிகர்கள் மீது அவர் வைத்துள்ள பெரும் பற்றையே காட்டுகிறது. எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் இது நிகழ்ந்திருக்கிறது என்கின்றனர். அரசுக்குப் பெரிய கூட்டம் கூடினாலே பயம் வருகிறது. அதனாலேயே தாக்குதல் நடந்திருக்கலாம்” என்று சீமான் கூறினார்.

முன்னதாக, நேற்று முன் தினம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசும்போது, ”சுபஸ்ரீ மரணம் யதார்த்தமாக நடந்த ஒரு விஷயம்தான். ஏனெனில் இன்று பேனர் வைக்காதவர்களே கிடையாது. எல்லோரும் தங்களின் விழாக்களில் பேனர் வைக்கின்றனர். அப்படி இருக்கின்ற நேரத்தில் இளம்பெண் சுபஸ்ரீ அந்த இடத்தைத் தாண்டிச் சென்றுள்ளார். அந்தக் கணத்தில் காற்றில் பேனர் விழ வேண்டும்; தண்ணீர் லாரி அவர் மீது ஏற வேண்டும்; அவர் இறக்க வேண்டும் என்று விதி இருந்திருக்கிறது. அது நடந்துவிட்டது. இது யதார்த்தமாக நடந்த ஒன்று” என்று தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *