BREAKING NEWS

உணவு திருவிழாவில் மர்மநபர் சரமாரியாக சுட்டதில் 3 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் மர்மநபர் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது மக்கள் அலறியடித்து ஓடும் காட்சிகள் நெஞ்சை பதறவைக்கும் வகையில் உள்ளன.

பூண்டு திருவிழா

உலகின் மிகத்தரமான பூண்டு உற்பத்தி செய்யும் கலிபோர்னியாவின் கில்ராய் நகரம் ‘உலகின் பூண்டுத் தலைநகரம்’ என்றழைக்கப்படுகிறது. ‘கில்ராய் பூண்டுகள்’ உலகப் பிரசித்தம் பெற்றவை. பூண்டு சாகுபடிக்குத் தேவையான வளமான நிலமும் பொருத்தமான காலநிலையும் இருப்பதால் இங்கு மட்டுமே ஆண்டுக்கு சுமார் 30 கோடி கிலோ அளவுக்குப் பல வகைப்பட்ட பூண்டுகள் விளைவிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் கடைசி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இங்கு நடைபெறும் பூண்டுத் திருவிழா, அமெரிக்காவில் நடக்கும் உணவுத் திருவிழாக்களிலேயே மிகப்பிரம்மாண்டமானதாகும். இசை நிகழ்ச்சி, பூண்டு அழகிப் போட்டி, பேச்சுப்போட்டி, சமையல் போட்டி, கைவினைப்பொருட்கள் விற்பனை, பூண்டு வகைகளின் கண்காட்சி, விற்பனை என பூண்டுத் திருவிழா பல்வேறு அம்சங்களுடன் களைகட்டும்.

அவ்வகையில், இந்த ஆண்டின் மூன்று நாள் திருவிழாவின் இறுதி நாளான நேற்று முந்தினம் அங்கு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது திருவிழா கூட்டத்தில் ஒருவர் திடீரென்று கண்மூடித்தனமாக மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.

துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் உயிர் பயத்தில் சிதறி ஓடினர். இந்த எதிர்பாராத தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், துப்பாச்சிச்சூடு நடத்திய மர்மநபர் குறித்து விவரம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply