BREAKING NEWS

உடைந்த சன்னல் தத்துவம் உணர்த்தும் பாடம்..!

“ ஒரு வீட்டின்  உடைந்து போன சன்னல் பழுதுபார்க்கப்படாமல் அப்படியே விடப்படுமானால் அந்த சன்னல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் அழைப்பு”  என்கிறார்கள், அமெரிக்க,சமூகவியல் விஞ்ஞானிகள், ஜேம்ஸ் க்யூ வில்சன் மற்றும் ஜியார்ஜ் எல் கெல்லிங்.

இவர்களின் இந்த தத்துவம் ‘உடைந்த ஜன்னல் தத்துவம்’ (Broken Window Theory)என்று பிரபலமாக பேசப்பட்டது. இந்த தத்துவத்தை மிகசிறப்பாக பயன்படுத்தி வெற்றிகண்ட, நியூயார்க்கின்  காவல்துறை ஆணையர் வில்லியம் பிராட்டன், மற்றும் நியூயார்க் நகர மேயர், ரூடி கைலியானி(1990) ஆகியோரும் பிரபலமடைந்தனர்.

குற்றத்தடுப்புக்கு மிகச்சிறந்த வழி, இலக்கை கடினப்படுத்துவதுதான் (Target Hardening). சமூக விரோதிகள் குறிவைக்கும் இலக்குகள்… பாதுகாப்பற்ற வீடுகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், சமூக விழிப்புணர்வு இல்லாத மக்கள்.

பாதுகாப்பில்லாத இல்லங்களிலும், நிறுவனங்களிலும் இருந்து பணமும் விலைமதிப்புள்ள பொருள்களும் களவாடப்படுகின்றன. வீட்டின் பூட்டைஉடைத்து திருடும் திருடர்கள் பலருக்கு ஆயுதம் கொண்டுவரும் சிரமத்தை வீட்டின் சொந்தக்காரர் பல சந்தர்ப்பங்களில் கொடுப்பதேயில்லை. அதற்கான ஆயுதமான மண்வெட்டி, கடப்பாரை, ஏணி எல்லாம் வீட்டைச் சுற்றியே போட்டுவைத்திருப்பார்கள்.

விழிப்புணர்வு இல்லாத மக்களிடமிருந்து, பொருள்களோடுகூட அவர்களின் விலைமதிப்பற்ற அறிவு களவாடப்படுகிறது. சமூகவிரோதிகள் அவர்களை மூளைச்சலவை செய்து சமூகவிரோத செயல்களுக்கு, அவர்களின் அறிவையும் உழைப்பையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எனவே, இலக்கை கடினமாக்குவது என்பது அவர்களுக்கும் பொருந்தும். விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இத்தகைய மனித இலக்குகளைக் கடினமாக்கிக் காப்பற்றும் வழி.

அச்சு ஊடகமானாலும் சரி, காட்சி ஊடகங்களானாளும் சரி, அன்றாட சமூக நிகழ்வுகளைச் சற்று அளவுக்கு அதிகமாகவே முன்னிலைப்படுத்தி காட்டுகின்றன. ஆனால், அது நம் மக்களின் மனத்தில் தேவையான அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை.

சம்பவங்களை, செய்திகளாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். படிப்பினையாக எடுத்துக்கொள்ள இன்னமும் அவர்களின் மனம் பக்குவப்படவில்லை. அதனால்தான், இதுவரை எத்தனை குழந்தைகள் ஆழ்துளைகிணற்றில் விழுந்துள்ளார்கள்? எத்தனை உயிர்கள் காத்தாடி மாஞ்சா கயிறுக்கு பலியாகியிருக்கிறது?  எத்தனை ஏடிஎம் மையங்கள், வங்கிகள், நகைக்கடைகள், கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது?

எத்தனைபேர் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்ய இறங்கி விஷ வாயு தாக்கி உயிரிழந்திருக்கிறார்கள்? எத்தனை பேர் மோட்டார் வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியும், சாலைவிதிகளை மீறியும், மற்றவரின் உயிரைப் போக்கியிருக்கிறார்கள்? அல்லது தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்… என்று கணக்கெடுத்து விவாதித்துக்கொண்டிருக்கும் நிலையில்தான்  இன்னமும் இருக்கிறோம்.

எத்தனைமுறை அழிந்தாலும் படிப்பினை பெற்றுக்கொள்ளாத வீட்டில் பூச்சிகளல்ல நாம். ஆறறிவுள்ள மனிதர்கள். அந்த ஆறாவது அறிவு நமக்கு அடுத்தவர் அனுபவத்திலிருந்தே பாடம் கற்றுக்கொள்ள துணை செய்ய வேண்டும்.

உன்னை ஒருவன் ஒருமுறை ஏமாற்றினால் அது உனது குற்றமாக இல்லாமலிருக்கலாம். ஆனால், மறுமுறையும் உன்னை அவன் ஏமாற்றினால் அது உன் குற்றமே என்கிறார் ஒரு அறிஞர்.

கிளையின் மீது அமர்ந்திருக்கும் பறவை அந்தக் கிளையின் உறுதியை நம்பி அமர்ந்திருப்பதில்லை. அது தன் இறக்கைகளின் சக்தியை நம்பித்தான் அமர்ந்திருக்கிறது. அது போல, இந்த சமுதாயத்தில் நமக்கு ஏற்படும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் சக்தி படைத்த அறிவை இயற்கை நமக்கு கொடுத்திருக்கிறது. அதனைக் கூர்மைப்படுத்தி வைத்துக்கொள்ளும் பொறுப்பு மட்டுமே நம்முடையது.

அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழும் பலநிகழ்வுகள் நமக்கு பல செய்திகளை அறிவித்து பல்வேறுவிதமான விழிப்புணர்வுகளை  ஏற்படுத்துகிறது.  ஆனால், அது எதுவுமே நம்மை பன்படுத்தா வகையில் இருந்து, அதே போன்றதொரு நிகழ்வில் நாம் பாதிக்கப்பட்டால் அது நம்முடைய குற்றமே.

கவனத்தைத்  திசைதிருப்பி செய்யப்படும் குற்றங்கள் என்று ஒருவகை இருக்கிறது. வங்கிகளில் பணம் எடுத்து வருபவரை குறிவைத்து, அவர் கண்ணில்படும்படி சில ரூபாய் நோட்டுகளை போட்டு விட்டு, “சார் உங்க பணமா பாருங்க’’  என்பார்கள். அவர் “ஆம்”என்று சொல்லிவிட்டு, குனிந்து எடுப்பதற்குள் பணம் இருக்கும் பையை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள்.

அல்லது அவர் மீது ஒரு ரொட்டித்துண்டை நீரில் நனைத்து போட்டுவிட்டு, “உங்கள் சட்டையில் ஏதோ பட்டிருக்கு சார்”என்பார்கள் அவர் பையை வைத்துவிட்டு சுத்தம் செய்ய முயற்சிக்கும்போது அந்தப்பை பறி போய்விடும்.

காரில் போவோரிடம் ‘பின்னால் ஆயில் ஒழுகுகிறது’அல்லது ‘ஏதோ ரத்தம் பட்டிருக்கிறது’ என்பார்கள். இறங்கிப் பார்க்கும்போது, முன்சீட்டில் இருந்த பை அல்லது லேப்டாப் இவைகளை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

இரண்டு மூன்று பேர் சேர்ந்து இந்த குற்றத்தைச் செய்வார்கள். இது ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் குற்றவாளிகளின் செயல் முறை.

இவையெல்லாம் நம்முடைய பலவீனத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்கள். இவற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள  நம்முடைய சொந்த அறிவும் மற்றவரின் அனுபவம் வாயிலாகக் கிடைக்கும் விழிப்புணர்வும் பயன்படவேண்டும்.

ஒரு குல்லாய் வியாபாரி மரத்தடியில் படுத்து தூங்கியபோது குரங்குகள் குல்லாய்களைத் தூக்கி சென்றதாகவும், பிறகு எழுந்து பார்த்த வியாபாரி தன் தலையில் அணிந்திருந்த தொப்பியைத் தூக்கிப்போட்டதும் எல்லா குரங்குகளும் அதனிடமிருந்த தொப்பியைப் போட்டுவிட்டதாகவும் நாம் பள்ளி வயதில் படித்திருக்கிறோம். அந்த தொப்பி வியாபாரி தன் பேரனுக்கு தன் அனுபவத்தைச் சொல்லி வியாபாரத்துக்கு அனுப்பி வைத்தார்.  சொல்லி வைத்தாற்போல் அவருக்கும் அதே அனுபவம் ஏற்பட்டது. குரங்குகள் தொப்பிகளைத் தூக்கிச் சென்றுவிட்டன. ஆனால், வியாபாரி தன் தாத்தா சொன்னபடி தொப்பியைத் தூக்கிப் போட்டதும் குரங்குகள் தொப்பியைத் திருப்பித்  தூக்கிப் போட வில்லை.  திகைத்துப்போய் அமர்ந்திருந்த வியாபாரியிடம்  ஒரு குரங்கு இறங்கிவந்து அவரிடம் சொன்னது, “உங்களுக்குதான் தாத்தா இருப்பாரா யோசனை சொல்ல ? எங்களுக்கு எங்கள் தாத்தா புத்தி சொல்ல மாட்டாரா?” என்று.

விழிப்புணர்வு எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம்.  அதை சிந்தித்து ஏற்றிக்கொள்ளும் மனப்பக்குவம் எல்லோருக்கும் வேண்டும்.

சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவத்தில் ஆழ்துளை கிணறு தோண்டுபவரின் மகன் ஒருவன் கொடுத்த வாக்குமூலம் என்று ஒரு செய்தி சமூக ஊடகத்தில் பரவி வந்தது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால், பாரம்பரிய முறைகள் பல அறிவியலை மறைமுகமாக சார்ந்திருந்ததை ஒப்புக்கொண்டுதான் தீர வேண்டும்..

பழங்காலத்தில் கிணறு தூர் எடுக்க வருபவர்கள் ஒரு கொள்ளிக்கட்டை அல்லது தீப்பந்தத்தை அல்லது ஒரு உயிரான கோழியைக் கயிற்றில் கட்டி கிணற்றிற்குள் விடுவார்கள்.  நீர்ப் பரப்புக்கு மேலேயே அந்த தீ சட்டென்று  அணைந்துபோய் விட்டால் அல்லது கோழி இறந்துபோய் விட்டால் கிணற்றிற்குள்  பூதம் இருப்பதாக சொல்லி இறங்கமாட்டார்கள்.

மஞ்சள் நீரைத் தெளித்து அவர்கள் செய்யும் பூசைகள் அங்கு நிரம்பியிருக்கும் மீத்தேன் ,கார்பன்-டை-ஆக்சைடு போன்ற விஷ வாயுக்களை அகற்றக் கூடியதாக இருக்கும். அதன்பின்  திரும்பவும் முன்பு செய்த சோதனையைச் செய்துவிட்டு இறங்குவார்கள்.

இதை வைத்துத்தான் பரமார்த்த குரு கதையில் ஆறு விழித்திருக்கிறதா என்று பார்க்க கொள்ளிக்கட்டையை ஆற்று நீரில் வைத்துப் பார்த்ததாக வருகின்ற சம்பவம். தன்னுடைய பல படையெடுப்புகளில் தோல்விகண்டு காட்டில் சுற்றிக்கொண்டிருந்த ஓர் அரசன்  பசி தாங்காமல் காட்டின் நடுவில் குடிசை போட்டிருந்த ஒரு கிழவியிடம் உணவு வேண்டினான். அந்த மூதாட்டியும் தான் தயாரித்த களியை சுடச்சுட கொண்டுவந்து ஒரு தட்டில் இட்டு அவனிடம் வைத்தாள். பசி வேகத்தில் அந்தக் களியின் நடுப்பகுதியில் விரலை வைத்து சுட்டுக்கொண்டு  வாயில் விரலை வைத்தான்.

இதனைப்பார்த்த அந்த மூதாட்டி, “எங்க ஊரு ராஜா மாதிரி முட்டாளா இருக்கியே,” என்றாள். இதைக்கேட்டதும் மன்னனுக்கு தூக்கிவாரிப்போட்டது.  நம்மை யாரென்றே தெரியாத ஒரு கிழவி முட்டாள் என்று சொல்வதா? கோபத்தை மறைத்துக்கொண்டு பசிக்கு உணவளித்த கிழவியின் மனிதாபிமானத்துக்கு மதிப்புக் கொடுத்து அமைதியாக அவளின் கருத்துக்கு காரணம் கேட்டான்.

கிழவி சொன்னாள், “ எங்க ராஜா படையெடுக்கிற ஒவ்வொரு முறையும் நேரடியாகப் போய் தலைநகரத்தைத் தாக்கிவிட்டு அங்கு குவிக்கப்பட்டுள்ள படைகளைச் சமாளிக்கமுடியாமல் தோல்வியுடன் திரும்புகிறான். எல்லைப் புறத்தில் தாக்கினால் தலைநகரிலிருந்து படைகள் வருதற்கு ஏற்படும் தாமதம்தான் நமது வெற்றிக்கு கிடைக்கும் வாய்ப்பு என்பது அவனுக்கு புரியவில்லை,”   என்று.

அரசனுக்கு அப்போதுதான் உதித்தது  பயனளிக்கும் யோசனை என்பது யாரிடம் வேண்டுமாலும் ஒளிந்து கொண்டிருக்கலாம். அதை தேடிக் கண்டுபிடிப்பதில்தான் நம் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது.

கூர்மையான பற்களுக்கிடையே சுழலும் நாக்கு தன்னைக் காயப்படுத்த பற்களை அனுமதிப்பதில்லை. நம்மைச் சுற்றியுள்ள ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நம்மைக் கடினமாக்கிக் கொள்ளும் விழிப்புணர்வு நமக்குத்தேவை.

                – மா.கருணாநிதி,

காவல்துறை கண்காணிப்பளர் (ஓய்வு),

 தொடர்புக்கு: spkaruna@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *