தற்போதைய செய்திகள்
download

உடுமலையில் சங்கர் ஆவணப் படுகொலை வழக்கு,கவுசல்யாவின் தந்தைக்கு இரட்டை தூக்கு * கூலிப்படையினர் 5 பேருக்கும் மரணதண்டனை * தாய் உள்பட 3 பேர் விடுவிக்கப்பட்டனர்….

திருப்பூர், டிச. 13-
உடுமலைப்பேட்டையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சங்கர் ஆவணப் படுகொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி திருப்பூர் வன்கொடுமை தடுப்புக்கான சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
சங்கர்-கவுசல்யா
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலையில் உள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர். அவர் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். பழனியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சங்கர் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் கவுல்சல்யாவின் பெற்றோர் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கவுசல்யாவும் சங்கரும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.
ஆணவப் படுகொலை
இந்நிலையில் ,கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி கலப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர் மற்றும் கவுசல்யா தம்பதியினர் உடுமலை பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டனர்.
இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த வெட்டுக்காயங்களுக்கு ஆளான கவுசல்யா தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தார்.
இந்த ஆணவப் படுகொலை சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
குண்டர் சட்டம்
இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, எம்.மணிகண்டன், மற்றொரு மணிகண்டன், எம்.மைக்கேல் என்கிற மதன், பி. செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், கல்லூரி மாணவர் பிரசன்ன குமார் ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரின் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை கடந்த மாதத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி அலமேலு நடராஜ் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
தந்தைக்கு இரட்டை தூக்கு
இதில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 8 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத்தவறினால் மேலும் 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 பேருக்கு தூக்கு
சின்னசாமியின் நண்பர் ஜெகதீசன், எம். மணிகண்டன், செல்வக்குமார், மைக்கேல் என்கிற மதன், கலை தமிழ்வாணன், ஆகியோருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை தவிர தூக்குதண்டனை பெற்ற மற்ற 5 பேரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் ஆவர்.
கூலிப்படையைச் சேர்ந்த மற்றொரு குற்றவாளி ஸ்டீபன் தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மா. மணிகண்டனுக்கு 5 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தாயார் விடுதலை
இந்த வழக்கில் கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி தாய்மாமன் பாண்டிதுரை, கல்லூரி மாணவர் பிரசன்னா ஆகிய 3 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Leave a Reply