தற்போதைய செய்திகள்

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது.உடனடி நடவடிக்கை எடுக்கும் படி பிரதமருக்கு முதல்வர் கடிதம் …

சென்னை,
‘‘காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைத்து அவற்றை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்’’ என்று நேற்று சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
6 வாரம் கெடு

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. ‘‘தமிழகத்திற்கு நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்த 192 டி.எம்.சி. தண்ணீரின் அளவை குறைத்து 177 டி.எம்.சி.யாகவும், கர்நாடகத்திற்கு கூடுதலாக 14 டி.எம்.சி. கூடுதலாக ஒதுக்கீடு 284 டி.எம்.சி.யாகவும் ஒதுக்கீடு செய்து’’ உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. மேலும், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை ஆணையத்தையும் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பாதகமான தீர்ப்பு

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தமிழகத்திற்கு சாதமான அம்சங்கள் இல்லாத நிலையிலும், நீதிமன்றம் தெரிவித்தப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் வலியுறுத்தினர். மேலும், கடந்த மாதம் 22-ந் தேதி தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில், மேற்படி வாரியத்தை அமைக்க கோரி பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்திடவும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படி தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆனால், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கும்படி பிரதமர் அலுவலகம் தெரிவித்துவிட்டது.
ஏமாற்றம்

இந்நிலையில், தான் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடந்த 9-ந் தேதி டெல்லியில் காவிரி பிரச்னை குறித்து ஆலோசனை நடத்திட அழைப்புவிடுத்தது. அதன்படி, நடந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்றனர். இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த ஒரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை.

இது தமிழக அரசு மற்றும் தமிழக தலைவர்கள் மத்தியிலும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை திமுக உள்ளிட்ட கட்சிகள் முன் வைத்தன.

சிறப்பு கூட்டம்

இந்நிலையில், சட்டசபையின் பட்ஜெட் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில், தமிழக அரசின் 2018-2019-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, காவிரி பிரச்னையை விவாதிப்பதற்காக நேற்று மாலை சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது.

தனித்தீர்மானம்

இந்த கூட்டத்தில், அரசினர் தனித் தீர்மானத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:
காவிரி நதிநீர்ப் பிரச்சனை, காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து இருக்கிறது. நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு உடனடியாக அமைக்கவும், அவ்வமைப்புகள் அனைத்து அதிகாரங்களும் கொண்ட அமைப்புகளாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பின்வரும் தீர்மானத்தை இம்மாமன்றத்தில் முன்மொழிகிறேன்.
மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

“காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படியும், உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பின்படியும், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை திறம்பட செயல்படுத்துவதற்கு, அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைத்து அவற்றை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று இந்த மாமன்றம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.”

அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தினை ஒரு மனதாக நிறைவேற்றித் தரும்படி உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

மு.க.ஸ்டாலின் பேச்சு

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘இனி காலம் தாழ்த்தாமல் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்றால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகிட வேண்டும். தி.மு.க. உறுப்பினர்களும் பதவி விலக தயராக இருக்கிறோம். ஆகவே, இந்த தீர்மானத்திற்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம்’ என்றார். அதேபோல சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீம் எம்.எல்.ஏ. அபுபக்கர் ஆகியோரும் தீர்மானத்தை ஆதரித்து பேசினர்.
இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து பேசினார். இதைத் தொடர்ந்து, தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Leave a Reply