தற்போதைய செய்திகள்
stslin

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால்-தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு….

சென்னை,
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தி.மு.க. எம்எல்ஏக்கள் கூண்ேடாடு ராஜினாமா செய்யத் தயார் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நிதிநிலை அறிக்கை
தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்று காலை சட்டசபையில் துணை முதல் – அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அவரது உரை முடிந்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பின்னர் மாலை 3.30 மணியளவில் சட்டசபை மீண்டும் கூடியது.
அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசினர் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-
பாதிக்கப்படுவது விவசாயிகள்
காவிரி தீர்ப்பை செயல்படுத்துவதை பொறுத்தமட்டில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், சிந்தனையாளும் செயலாலும் ஒன்றுபட்டு நிற்கின்றன. இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்க பிரதான எதிர்க்கட்சி மற்றும் அனைத்து கட்சிகளின் ஒரே அணுகுமுறையை, ஒரே நோக்கத்தை உணர்வுபூர்வமான ஒற்றுமையை இந்த அரசு முழு அளவில் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
நமக்குள் ஒருவருக்கு ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருப்பதற்கு இது உகந்த நேரம் அல்ல. ஏனென்றால் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு விவசாயிகள். கேள்விக்குள்ளாக்கப்படுவது தமிழக மக்களின் உரிமை சார்ந்த தண்ணீர். கர்நாடக மாநில அரசு இடைக்கால தீர்ப்பின்படியும் தண்ணீர் திறந்து விடவில்லை. இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலும் தண்ணீர் திறந்துவிடுவதில்லை.
தெளிவாக கூறியுள்ளது
இந்திய நாட்டின் மிக உயரிய உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் அதை ஏற்று தண்ணீர் திறந்துவிட்டு அண்டை மாநில உறவை மேம்படுத்தவோ, தமிழக விவசாயிகளின் உரிமைப்படி தண்ணீரை அளிக்கவோ முன்வராமல் அடம் பிடித்து, சட்டத்திற்கு புறம்பாகவும், நீதிநெறி முறைகளுக்கு முரணாகவும் நடந்து கொண்டிருக்கிறது.
இது போன்றதொரு சூழ்நிலையில்தான் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை சில மாற்றங்களுடன் உச்சநீதிமன்றம் கடந்த 16-ந் தேதி உறுதி செய்தது. கர்நாடகமும், மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் சட்டப்படியான காரியத்தில் தாமதம் செய்து விடக்கூடாது என்பதற்காகவே, தீர்ப்பு வெளியான தேதியிலிருந்து 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாக கூறியது.
நெருக்கடியான தருணம்
ஆனாலும், மத்திய அரசு அந்த தீர்ப்பை ஏற்று இன்று வரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உள்நோக்கத்துடன் பொருள் கொண்டதால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக முதல் அமைச்சர் அனைத்து கட்சி தலைவர்களை அழைத்துச் சென்று பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர வேண்டும் என்று கடந்த மாதம் 22-ந் தேதி முடிவு செய்தோம். ஆனால் அனைத்துக் கட்சித் தலைவர்களை இதுவரை பிரமர் சந்திக்கவில்லை. ஜனநாயகத்திற்கே நெருக்கடியான தருணம்.
மத்திய அரசு எதிலும் அக்கறை காட்டாமல், உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் இவ்வளவு தயக்கமும், குழப்பமும் செய்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. நமது விவசாயிகள் இந்த எதிர்மறை போக்கை பார்த்து குமுறிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே 6 வார காலக் கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மேலும் காலதாமதம் செய்யாமலும், வேறு உத்தி எதையும் கையாளாமலும் மத்திய அரசு உடனடியாக முன் வர வேண்டும்.
ராஜினாமா
இந்த தீர்மானத்தின் மூலம் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வும், ஒற்றுமையும், நோக்கமும் மத்திய அரசுக்கு உணர்த்தப்படுகிறது. இந்த தீர்மானத்தின் பின்னணியில் மதிய அரசுக்கு முழு அழுத்தம் கொடுத்து முதல் – அமைச்சர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், தேவையான நடவடிக்கைகளை துரித கதியில் எடுக்க வேண்டும்.
காவிரி பிரச்சினை நம் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் இரண்டற கலந்து ஊறிப்போன பிரச்சினை. 6 வார காலத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும். திமுக சார்பில் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம். இந்த தீர்மானத்தை திமுக முழு மனதோடு ஆதரிக்கிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Leave a Reply