தற்போதைய செய்திகள்

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 வாரத்துக்குள்-காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழக அரசு வலியுறுத்தல்.முதல்வர் அவசர ஆலோசனை..

சென்னை,
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைத்திட வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நேற்று டெல்லியில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது.
தண்ணீர் குறைப்பு
காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் கடந்த மாதம் 16-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில், ‘கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. நீரை ஒதுக்கி 284.75 டி.எம்.சி.யாக அதிகரித்தும், தமிழகத்திற்கு நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்த 192.25 டி.எம்.சி. தண்ணீரின் அளவை குறைத்து 177.25 டி.எம்.சி. வழங்கிடவும்’ நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதுதவிர, காவரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் 6 வாரத்திற்குள் மத்திய அரசு அமைத்திட வேண்டும் என்று உத்தரவில் சுட்டிகாட்டியதும் தெரிந்தே. இந்த தீர்ப்பை எதிர்த்து 15 ஆண்டுகளுக்கு வழக்கு தொடுக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிகாட்டியது.
பிரதமரை சந்திக்க முடிவு
இந்நிலையில், சென்னை கோட்டையில் கடந்த மாதம் 22-ந் தேதி அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இதில், ‘காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க கோரி அனைத்துக் கட்சித் தலைவர்களும் முதல்வர் தலைமையில் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனுமதி கிடைக்கவில்லை
இதற்காக பிரதமரை சந்திக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால், மத்திய நீர்வள அமைச்சரை சந்திக்கும்படி பிரதமர் அலுவலத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டதும் அறிந்ததே. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து விவாதித்திட வரும் 9-ந் தேதி டெல்லியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
அதன்படி நேற்று, டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் சார்பில், மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திரா பிரசாத் சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழக அரசு தகவல்
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், இன்று (9.3.2018) புதுடில்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வலியுறுத்தல்
இந்தக் கூட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
அனைத்து அதிகாரங்கள்
மேலும், காவிரி நடுவர் மன்றத்தின் ஆணைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு, அனைத்து அதிகாரங்களும் கொண்டதாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகள் இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவிரி தொழில் நுட்பக் குழுமத் தலைவர் ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply