தற்போதைய செய்திகள்

ஈரோடு தி.மு.க. மாநாட்டில் கருணாநிதி கலந்து கொள்ளமாட்டார் மு.க.ஸ்டாலின் பேட்டி…………

சென்னை,

ஈரோட்டில் நடைபெற உள்ள தி.மு.க. மாநாட்டில் கருணாநிதி கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மண்டல மாநாடு

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மண்டல மாநாடு நாளையும்(இன்று), நாளை மறுநாளும்(நாளை) நடைபெற இருக்கிறது. மாநாட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னணி பேச்சாளர்கள், பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற இருக்கிறார்கள்.

மண்டல மாநாடு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் அந்த மாநாடு மாநில மாநாட்டையும் மிஞ்சக்கூடிய அளவுக்கு நடைபெற இருக்கிறது.

வடிகட்டிய பொய்

கே: உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மத்திய அரசின் ரூ.1950 கோடி நிதி தமிழ்நாட்டிற்கு கிடைக்காமல் போய் விட்டதே?

ப: இதற்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததற்கு தி.மு.க. தான் காரணம் என்கிறார். இது உள்ளபடியே அப்பட்டமான பொய். இதற்கு அவர் மீது நாங்கள் அவதூறு வழக்கு போட வேண்டும்.

நாங்கள் நீதிமன்றத்துக்கு சென்றது முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காகத்தான். தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி பல தில்லுமுல்லுகளை செய்ததை சுட்டிக்காட்டி, அதை சரி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் உயர் நீதிமன்றத்துக்கு சென்றோம்.

அவல நிலை

உயர்நீதிமன்றமும் அந்த அடிப்படையில்தான் தேர்தல் ஆணையத்துக்கு சில விதிமுறைகளை கூறி உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையமும், இந்த அரசும், உயர்நீதிமன்றம் சுட்டிகாட்டி இருக்கக் கூடிய அந்த உத்தரவுகளை இதுவரை நிறைவேற்றவில்லை.

அதனால்தான், இந்த தேர்தல் நடைபெறவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அவர்களுக்கு ஒருதுளி அளவும் எண்ணம் இல்லை. தேவையில்லாத வகையில் தி.மு.க.தான் தேர்தலை நிறுத்துவதற்கு காரணம் என்று வீண்பழி சுமத்தி கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசு ஒதுக்கக் கூடிய நிதியை கூட பெற முடியாத அவல நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை இது எடுத்து காட்டுகிறது.

அனுமதி தரவில்லை

கே:- ஈரோடு மாநாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொள்வாரா?

ப:- அவர் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.

கே:- காவிரி பிரச்சனைக்கு புதிய திட்டம் அமைக்கப்போவதாக கூறப்படுகிறதே?

ப:- திட்டங்களை அறிவிக்கலாம். ஆனால் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன? 6 வார காலத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெளிவுப்படுத்தி உள்ளது. அதைத் தான் நாங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளோம். பிரதமரை சந்திக்கவும் நேரம் கேட்டிருக்கிறோம். இதுவரை பிரதமர் அதற்கு அனுமதி தரவில்லை.

செவிசாய்க்கவில்லை

அதையும் தாண்டி சட்டமன்றத்தில் இதுகுறித்து ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். இதுவரை அவர்கள் செவிசாய்க்கவில்லை. நேற்று (நேற்று முன்தினம்) கூட சட்டமன்றத்தில் நான் இந்த பிரச்சனையை எழுப்பிய நேரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறும் போது கொஞ்சம் பொறுங்கள், 29-ந்தேதி வரை பொறுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

நிச்சயமாக இந்த அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு சரணாகதி அடைந்திருக்கிறது. எனவே நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. ஆகவே ஊரை ஏமாற்றி இன்றைக்கு தமிழ்நாட்டையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கமி‌ஷன் வாங்குவது, ஊழல் செய்வது என்ற அடிப்படையில்தான் இந்த ஆட்சி நடக்கிறது. மக்களைப்பற்றி கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply