BREAKING NEWS

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட பிரிட்டிஷ் கப்பலில் இருந்த 7 இந்தியர்கள் விடுவிப்பு

ஈரானின் வளைகுடா பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட பிரிட்டன் கப்பலில் இருந்த 7 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் கூறும்போது, ‘‘ ‘ஸ்டெனா இம்பெரோ’ என்ற இங்கிலாந்து கப்பலை ஈரான் கடற்படை கடந்த ஜூலை மாதம் சிறைபிடித்தது. அந்தக் கப்பலில் இருந்த படைத் தளபதி மற்றும் ஊழியர்கள் மீது எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சட்டவிதிகளை மீறியதால் கப்பல் மட்டும் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த ஊழியர்கள் அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்” என்று தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அக்கப்பலிருந்த இந்தியர்கள் ஏழு பேரை விடுவித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட கப்பலை இயக்கும் நிறுவனமான ஸ்டீனா பல்க்கினின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் ஹெனல் கூறும்போது, “எங்களுக்கு இதுகுறித்த தகவல் வந்துள்ளது. ஆனால், இன்னும் அவர்கள் கப்பலில்தான் இருக்கிறார்கள். இதுகுறித்து தொடர்ந்து நாங்கள் ஈரான் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் இப்போது ஈரானிலிருந்து அவர்கள் வெளியேறிவிட்டார்கள் என்ற செய்திக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்” என்றார்.

முன்னதாக, ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதன் காரண மாக ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த ஈரான் நாட்டு வீரர்கள், வளைகுடா கடல் பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தைச் சுட்டு வீழ்த்தினர். இதற்கு பதிலடியாக ஈரானின் ஆளில்லா உளவு விமானத்தை அமெரிக்க ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.

இவ்வாறு வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில், கடந்த ஜூலை 19ம் தேதி இங்கிலாந்து நாட்டுக் கொடியுடன் சவுதிக்கு ஹார்முஸ் ஜலசந்தி பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்த ‘ஸ்டெனா இம்பெரோ’ என்ற எண்ணெய்க் கப்பலை ஈரான் அரசு சிறை பிடித்தது. இந்தக் கப்பலில் உள்ள 23 பேரில் 18 பேர் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மகாராஷ்டிரா, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதர ஊழியர்கள் ரஷ்யா, பிலிப்பைன்ஸ், லாட்வியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.




Leave a Reply