BREAKING NEWS

இஸ்லாம் மதம் சார் குறியீடுகள், எழுத்துகளுக்கு பெய்ஜிங்கில் தடை கடைகள், உணவகங்களில் அரபு விளம்பர பலகைகள் அகற்றம்

சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள உணவகங்களில் இஸ்லாம் மதம் சார்ந்த குறியீடுகளோ, எழுத்துக்களோ இருக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனாவில் 2 கோடி இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பலர் கடைகள் மற்றும் உணவகங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகள் மற்றும் உணவகங்களில் மதம் சார் குறியீடுகள் மற்றும் அரபு எழுத்துக்களுடன் கூடிய விளம்பர புகைப்படங்களை பெய்ஜிங் அதிகாரிகள் அகற்ற சொல்வதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹலால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யும் 11 உணவகங்களுக்கு அண்மையில் சென்ற அதிகாரிகள் ஹலால் என்று அரபு மொழியில் எழுதப்பட்ட விளம்பர பதாதைகளை அகற்றுமாறு உத்தரவிட்டனர்.

ஆனால் பெய்ஜிங்கில் உள்ள அனைத்து கடைகளுக்கும் இது போன்று உத்தரவிடப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக விளக்கம் அளிக்கப்படவில்லை. இதை தொடர்ந்து சீனாவில் வசிக்கும் இஸ்லாமியர்களை அந்நாட்டின் கலாச்சாரத்திற்கு மாற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சீனாவின் இன மற்றும் மத விவகாரங்கள் குழு விளக்கம் அளிக்க மறுத்துவிட்டது. இதை அடுத்து சீனாவின் கலாச்சரத்திற்கு இணங்கி நடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே அந்நாட்டில் உள்ள மசூதிகள் கட்டுமானம் மத்திய கிழக்கு நாடுகளை போல் அல்லாமல் பகோடாஸ் எனப்படும் அடுக்கு கோபுரங்கள் போல் மாற்றுவதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply