இவர் இப்படித்தான் எனும் கலையாத சித்திரங்கள்..! ~ வி.எஸ்.முகம்மது அமீன்,

நான் புரோட்டா விரும்பிச் சாப்பிடுபவன். என் இளைமைக்காலத்தில் பழைய சோற்றில் தண்ணீர் ஊற்றிச் சாப்பிடும் பழயதுக்கு தொட்டுக்க அரை புரோட்டா கிடைக்கும். புரோட்டாவைப் பிட்டுத்தின்று கஞ்சி குடித்து வளர்ந்த காலம் எங்களுடையது. வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் இரண்டு புரோட்டா கிடைக்கும். சிந்தாமாமா கடை (அம்மாவிற்குத்தான் இவர் தாய்மாமா. ஆனால் எல்லாருக்கும் அவர் சிந்தா மாமாதான்) புரோட்டா என்றால் அவ்வளவு விருப்பம். கடையநல்லூரில் இன்றைக்கும் காலை நாஷ்டா புரோட்டாதான். எங்கள் ஊரில் திருமண வீடுகளில் காலை நாஷ்டாவிற்கு ஆயிரக்கணக்கில் புரோட்டா தயாராகும். இரவு முழுவதும் தயாராகும் புரோட்டாவை கல்லிலிருந்து எடுத்து சாயாவில் ‘முக்கி’சாப்பிடாவிட்டால் அது என்ன கல்யாண வீடு..?

இப்போது மைதா அரக்கன் என்று புரோட்டா குறித்து எச்சரித்தாலும் அதைச் சாப்பிட்டுப் பழகியவர்கள் அதனைக் காதில் போட்டுக் கொள்வதில்லை. ‘கல்லத் தின்னாலும் செமிக்கற வயசு.. நல்லா சாப்பிடு’என்று வாப்பா சொலவடை சொல்வார்கள். காற்றில் மாசு, நீரில் அசுத்தம், உணவில் கலப்படம் என்ற காலத்தில் ஒவ்வொன்றையும் நுணுகிப் பார்த்தால் பட்டினிதான் கிடக்க வேண்டும்.  ‘வெந்ததைத் தின்றால் விதி முடியும்போது போகலாம்’என்றே வாழ வேண்டியிருக்கிறது.

சென்னையில் தங்கும் நாள்களில் இரவு மட்டும் ஹோட்டல்களில் சாப்பிடும் சூழல் இப்போது. பலவகையிலும் சாப்பிட வேண்டிய கட்டாயம். ஆனாலும் நூடுல்ஸை நான் விரும்பிச் சாப்பிடுவது கிடையாது. எப்போதாவது வேறு அமையவில்லையென்றால் சாப்பிடுவதுண்டு. ஃப்ரைட் ரைஸ் மீதும் எனக்கு விருப்பம் அவ்வளவாக இல்லை. ஒருநாள் என் நண்பர்களில் ஒருவர் ‘என்ன இன்னைக்கு நூடுல்ஸா?’என்று கேட்டார். அன்றைக்கு நான் நூடுல்ஸ் சாப்பிடவில்லை. மீண்டும் ஒரு சந்திப்பிலும் இதே கேள்வியை எழுப்பினார். ஒருவேளை நான் எப்போதோ நூடுல்ஸ் சாப்பிடுவதை அவர் பார்த்திருக்கக் கூடும். வாய்ப்புக் கேடாக மறுமுறை நூடுல்ஸ் சாப்பிடும்போதும் அவர் கண்ணில் பட்டிருக்கலாம். அல்லது ‘நானொரு நூடுல்ஸ் பிரியர்’என்று யாரேனும் அவர் மனத்தில் ஒரு சித்திரத்தை வரைந்திருக்கக் கூடும்.

 

‘ஏன் இப்படிக் கேட்கின்றீர்கள்?’என்று தோழரிடம் வினவியபோது ‘உங்களுக்கென்ன எப்போதும் நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ்..’என அடுக்கினார். இது ஓர் சித்திரம். இவர் இப்படித்தான் எனும் அழியாத கோலம். அவர் மனத்தில் ஆழப் பதிந்த அந்த நூடுல்ஸை என்னால் கிளறி எடுக்க முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை நான் நூடுல்ஸ் பிரியர். ஆனால், உண்மை அதுவல்ல.

ஒருவர் கொஞ்ச நேரம் பேசினாலும்சரி ‘எப்ப பாரு அவரு போன்லதான் இருப்பார்’ என்ற ஒரு சித்திரத்தை நம்முள் வரைந்துவிடுகின்றோம். ‘நீங்க பிஸியான ஆளு.. உங்கள போன்ல பிடிக்கவே முடியாது’ என்று சொல்பவர்களை நான் வியப்போடு பார்த்திருக்கின்றேன். இது இல்லாத சித்திரம். யாருக்குத்தான் இங்கு வேலையில்லை. வருகின்ற அழைப்பை ஏற்றுக் கொள்ள இயலாச் சூழல் எல்லாருக்கும் வாய்க்கும். ஆனால், எப்போதும் அப்படியில்லையே..!

மனச்சுவரெங்கும் சித்திரங்கள். ஒவ்வொன்றைக் குறித்தும் ஒவ்வொருவரைக் குறித்தும் நமக்கு ஓர் மதிப்பீடு இருக்கும். அந்த மதிப்பீட்டுச் சித்திரத்தின் மீது சூழல்கள் சில வண்ணங்களைப் பூசுகிறது. காணாமலேயே வரையும் கற்பனைச் சித்திரங்கள் இன்னும் விசித்திரமானவை. ஒருவரைக் குறித்து நாம் கேள்விப்படுவதை வைத்தே அவரைக் குறித்த மிகப் பிரமாண்டமாகவோ, மிக மோசமாகவோ ஒரு சித்திரத்தை நம்முள் வரைந்து கொள்ள அனுமதிக்கின்றோம். உண்மையில் நெருங்கிப் பார்க்கும்போது அந்த சித்திரம் சுக்கு நூறாய் உடைந்துவிடுகிறது.

பெண்களைக் குறித்த மதிப்பீடு இந்த சமூகத்தில் அவ்வாறுதான், கோணல் மாணலாய் தீட்டப்படுகிறது. ஒற்றைச் சிரிப்பிற்கு, ஓரப் பார்வைக்கு ஓராயிரம் அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டலைகின்றது மோகங்கொண்ட மனசு. எத்தனை முறை பார்த்துப் பழகினாலும் நல்லதோர் பிம்பத்தை வரைவதற்கு நெடுங்காலமாகிறது. அப்படியே நல்லதாகவே கட்டி எழுப்பிவிட்டாலும் அந்தச் சித்திரத்தை உடைத்துப்போட நிமிட நேரம் போதுமானதாகிவிடுகிறது.

 

நம்மை நாம் முற்றிலும் மாற்றிக் கொண்டாலும் கூட நமது பழைய சித்திரத்தை அழிப்பதற்கு இயலாமலேயே போய் விடுகிறது. அறியாமைக் காலத்தில் நாம் அறியப்பட்ட அதே சித்திரம் நாம் அறிந்து நம்மை மாற்றிய பின்னும் தொடர்கிறது.

தனி நபர் குறித்த சித்திரம் மட்டுமல்ல, ஒரு குடும்பத்தைக் குறித்த சித்திரம், ஓர் ஊரைப் பற்றிய சித்திரம், ஒரு சமுதாயத்தைப் பற்றிய சித்திரம் இப்படியே கட்டமைக்கப்படுகிறது. அந்தக் குடும்பமே இப்படித்தான்..! அந்த ஊர்க்காரங்களே இப்படித்தான் என்ற மட்டையடிச் சித்திரம். ஒரேயடியாகப் பூசி மெழுகப்படுகிறது. சினிமாக்களும், நாவல்களும் நம்முள் இவ்வாறான நிறைய போலிச் சித்திரங்களை விதைத்துக் கொண்டே இருக்கின்றன. இங்கு வரையப்படும் நாயகச் சித்திரம் நம் நடைமுறை வாழ்வில் பார்த்திராதவை. நாமல்லாத நம்மை நமக்கே காட்டும் மாயவித்தையை சினிமாக்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன.

சிலர் தாமாகவே வலிந்து தம்மைக் குறித்த போலியான சித்திரத்தை வரைந்து அந்தச் சித்திரத்திற்கு உயிரூட்டுவதிலேயே தம்மைத் தொலைத்துவிடுகிறார்கள். தம்மைத் தாமே வரைந்து தம்மை மெச்சி வாழும் சித்திரக்காரர்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றார்கள். அது போலிகளின் உலகம்.

ஆனால் உண்மையில் சில நேரங்களில் நம்மைக் குறித்து சில மெய்ச்சித்திரத்தை நாமே வரைய வேண்டியிருக்கின்றது. உலகம் எட்டி உதைத்து இருட்டுக்குள் தள்ளும்போது திமிறி எழுவதற்காக நம்மீது நாமே சிறிது வெளிச்சத்தை ஏற்றிவைக்க வேண்டியிருக்கிறது. நம் இருப்பை அடையாளப்படுத்திக் கொள்ள நாம் ஏதாவது செய்ய வேண்டும். கொஞ்சம் இருமிக் கொண்டாவது இருக்க வேண்டியிருக்கின்றது. அத்தகைய இருமல் சப்தங்களையும் தற்புகழ் பேசித்திரிபவன் என்ற வண்ணத்தை நம்மீது பூசி நலிந்துபோன நமது சித்திரத்தை அழுக்காக்கிவிடுகின்றார்கள். என் எழுத்துகளை நான் பதிவு செய்யவில்லை என்றால், என் வரலாற்றை நான் சொல்லவில்லை என்றால் நான் வரலாறற்றவனாகி விடுகிறேன். புழுதி தூற்றினாலும் பரவாயில்லை சில நேரங்களில் என்னை நான் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒருவர் கைகளிலும், கழுத்து நிறையவும் தங்க நகை அணிந்து வலம் வருகிறார். ‘பணத்திமிர்.. ஆடம்பரன்.. பெயர்விளம்பி..’என உலகம் எள்ளி நகையாடுகிறது இந்த நகைச் சித்திரக்காரரைக் கண்டு..! ‘ஏன்.. இப்படி..?’ என்று அவரிடம் விசாரித்தபோது அவர் கண்கலங்கிச் சொன்னார். ‘நான் பெரும் பணக்காரனோ, நகைக்கடைக்காரனோ அல்ல.. நான் பின்தங்கிய குடும்பத்தைச் சார்ந்தவன். என் உழைப்பில் நான் வாங்கிச் சேர்த்த பணத்தில் ஒரு மோதிரம் அணிந்தேன். சாதியப் பெயரால் என்னைத் திட்டித் தீர்த்து…‘நீயெல்லாம் நக போட்டா என்னாவும்டா..’என்று அசிங்கப்படுத்தினார்கள். அந்த அவமானத்தை உரமாக்கி வளர்ந்தேன். வசதி வாய்ப்புகள் பெருகியது. இளமையில் நான் பட்ட அவமானத்தை.. பட்ட வலியை… அவமானப்படுத்தியவர்களின் முகத்திலடிக்கும் விதமாகத்தான், அவர்களுக்கு முன் நானும் ‘மனுசன்தான்’னு காட்டுறதுக்காக இப்படித் திரிகிறேன்.’என்றார். இப்போது அவர் குறித்த சித்திரம் நம்முன் வேறொன்றாக விரிகிறது. ஒடுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் இருக்கின்றவரின் வலி அது. விடுதலையின் போர்க்குணம் அது.

ஊடகங்கள் ஊதிப் பெருக்கும் சித்திரம் ஆபத்தானது. இஸ்லாமியர்களைக் குறித்து இங்கு வரையப்பட்ட சித்திரம் மிகவும் அபத்தமானது. தாடியும், தொப்பியும் பயங்கரவாத முகங்களாக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளன. சாந்தி மார்க்கம் தீவிரவாத மார்க்கமாக வெகுநுட்பமாக கட்டிஎழுப்பப்பட்டுள்ளன. தீவிரவாதிகளின் படங்களை குழந்தைகளை வரையச் சொல்லிப் பார்த்தால் அத்தனையும் தாடிவைத்த தொப்பி வைத்த ஓவியங்களைத்தான் வரைவார்கள். பிஞ்சுக் குழந்தைகள் வரைக்குமாக அந்த அபத்தச் சித்திரத்தை ஊடகங்கள் ஊட்டி வளர்த்திருக்கின்றன.

‘ஏன் முஸ்லிம்களெல்லாரும் பயங்கரவாதிகளாக இருக்கின்றீர்கள்?’ என்று நண்பர் ஒருவர் வினா எழுப்பினார். ‘நீங்கள் இஸ்லாமிய சகோதரர்களுடன் பழகி இருக்கின்றீர்கள்தானே..!’ என்று கேட்டேன். ‘ஸாரி.. எல்லாரையும் சொல்லல.. பெரும்பாலும் அப்டித்தானே பாய் இருக்காங்க..!’ என்றார். ‘இஸ்லாமிய நண்பர்கள் உங்களுக்கு இல்லையா?’ என்று கேட்டபோது.. ‘என் நண்பர்களில் அதிகமானவர்கள் இஸ்லாமியர்கள்தான்’என்றார். ‘உங்கள் நண்பர்களில் எவராவது இந்தச் சிந்தனையில் இருந்திருக்கின்றார்களா?’ என்றால் இல்லை என்கிறார். ‘இஸ்லாமியச் சகோதரர்களின் கடைகளில் நீங்கள் பொருள்கள் வாங்கியிருக்கின்றீர்களல்லவா..! உங்கள் பகுதியிலுள்ள இஸ்லாமிய சகோதரர்களுடன் பழகியிருக்கின்றீர்களல்லவா..!’ என்று கேட்டால் எல்லாவற்றிற்கும் ‘ஆமாம்.. அவங்கெல்லாம் நல்லவங்க… நான் அவங்களச் சொல்லல… பாகிஸ்தான்.. ஆப்கானிஸ்தான்…’என்றார்.

‘நீங்கள் பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கின்றீர்களா?’என்றால் ‘இல்லை’என்கிறார். ‘சரி.. உங்கள் வாழ்வில் ஒரு முஸ்லிம் தீவிரவாதியையாவது சந்தித்திருக்கின்றீர்களா..?’ என்றால் ‘இல்லை..’என்கிறார்.

‘இஸ்லாமிய ஆசிரியரிடம் படித்திருக்கின்றீர்கள்.. இஸ்லாமிய சகோதரர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளீர்கள். பயணித்துள்ளீர்கள்.. அவர்களோடு இணைந்தே வாழ்ந்திருக்கின்றீர்கள். உங்கள் அருகில் வாழும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களில் ஒருவரைக் கூட நீங்கள் தீவிரவாதியாகப் பார்க்கவில்லை. இது உங்கள் வாழ்வியல் அனுபவம். ஆனால், நீங்கள் கண்ணால் பார்த்தே இராத, ஊடகங்களில் கேட்டுக் கேட்டுப் பழகிய  நம்பகமற்ற செய்தியை வைத்துக் கொண்டு எப்படி இந்த முடிவிற்கு வந்தீர்கள்? பயங்கரவாதச் செயலை ஆதரிக்கும் ஒரே ஓர் குர்ஆன் வசனத்தையோ, நபிமொழியையோ உங்களால் காட்டமுடியுமா? அல்லது இந்தத் தீவிரவாதச் செயல் சரிதான் என்று வாதிடக்கூடிய மார்க்க அறிஞர்கள் எவரையாவது உங்களால் காட்ட முடியுமா?’ என்று கேட்டேன்.  அவரிடம் எந்த பதிலும் இல்லை.

இஸ்லாமிய பெயர் தாங்கிய நாட்டுமிராண்டிகள் சிலர் தீவிரவாதச் செயலில் ஈடுபடுகின்றார்கள். ஆனால், இவர்கள் இஸ்லாத்தின் வளர்ப்பு அல்ல. வல்லாதிக்க நாடுகளின் வளர்ப்புப் பிள்ளைகள் இவர்கள். தீவிரவாத இழிசெயலில் ஈடுபடுபவர்களுக்கு மார்க்கத்தில் எந்த அங்கீகாரமும் இல்லை. ‘அநியாயமாக ஓர் உயிரைக் கொல்வது மனிதர்கள் அனைவரையும் கொலைசெய்வது போலாகும்( திருக்குர்ஆன் 5:32)’ என போதிக்கும் இஸ்லாத்தின் பெயரால்,  தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் எதிராக அன்பைப் போதிக்கும் ஒரு மார்க்கத்தின் முகமூடி அணிந்து கொண்டு எப்படி இவ்வாறெல்லாம் சித்திரிக்க முடிகிறது? என்பதைவிடவும் மிக முக்கியமான வினா, இவ்வாறு மீண்டும், மீண்டும் கட்டியெழுப்பப்பட்ட இந்த போலிச் சித்திரத்திலிருந்து எப்படி பொதுமனத்தை மீட்டெடுக்கப் போகிறோம் என்பதுதான்.

நம்மைக் குறித்து பிறர் என்ன சித்திரத்தை வரைந்து வைத்துள்ளார்கள்… நாம் பிறரைக் குறித்து என்னென்ன சித்திரங்களையெல்லாம் நம் மனத்தில் வரைந்து வைத்துள்ளோம் என்பதை நிதானித்துப் பார்த்தால் யதார்த்தங்களைப் புரிந்து கொள்ளலாம்.

‘உங்கள் தோழர்களைக் குறித்த தவறான செய்திகளைத் தராதீர்கள். அவர்களை நான் நல்ல நிலையிலேயே சந்திக்க விரும்புகின்றேன்’என்றார்கள் நபி(ஸல்) அவர்கள். தவறான செய்திகளைத் தவிர்ப்பதுடன், ஆராயாமல் எந்தச் செய்தியையும் விழுங்கிவிடாமல் இருப்பதுதான் போலிச் சித்திரங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

கொஞ்சம் கண்களை மூடிப் பாருங்கள். நினைவுக் குமிழ்களிலிருந்து கலையாத சித்திரங்கள் மேகப் பொதிபோல் ஊர்ந்து செல்வதைக் காணலாம்.

 

 

 

 

 

–  வி.எஸ்.முகம்மது அமீன்,

தொடர்புக்கு: vsmdameen@gmail.com

 

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *