BREAKING NEWS

இலங்கை அதிபர் அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும்..!

இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்ச 52.25 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த சஜித் பிரேமதாசவை விட 13 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று கோத்தபய ராஜபக்ச இலங்கையின் 8-வது அதிபராகப் பதவியேற்றுள்ளார்.  பதவி ஏற்பு விழாவே ஒரு வித்தியாசமான முறையில் நடைபெற்றுள்ளது.  இலங்கைத் தலைநகரான கொழும்புவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனுராதபுரத்தில் இருக்கும் குவன்வெலி இடத்தில் அமைந்துள்ள பழைமையான பௌத்த கோயில் வளாகத்தில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது! இதுவரையில் எந்த ஒரு இலங்கை அதிபரும் இப்படி நேரடியாக பௌத்த கோயில் வளாகத்தில் வந்து பதவி ஏற்றது கிடையாது.

பதவி ஏற்றபிறகு கோத்தபய ராஜபக்ச பேசுகிறபோது அவர் தெரிவித்த கருத்துகள் சில ரசிக்கும் படியாக இல்லை என்பதுதான் வேதனையைத் தருகிறது.  ‘‘சிங்கள சமூகத்தவரின் ஆதரவு மட்டுமே இருந்தால் போதும் நான் வெற்றி பெற்றுவிடுவேன் என்று நினைத்தேன் அது தற்போது சாத்தியமாகி உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.  பௌத்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதே வேளையில், அனைத்து சமூகத்தவரின் நலனுக்காகவும் பாடுபட உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு இலங்கையில் ஒட்டுமொத்த மக்களுக்கு அதிபராகி விடுகிறார்.  ஆனால், குறிப்பிட்ட சமூகத்தவரை மேற்கோள் காட்டி நன்றி தெரிவிப்பது நல்லதொரு தொடக்கம் அல்ல.  ஏனெனில் இலங்கையில் யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஈழத்தமிழர்கள் கோத்தபய ராஜபக்சவை ஆதரிக்க முடியாது என்று அரசியல் ரீதியாக முடிவெடுத்து, அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை ஆதரித்தனர்.  மேலும் இவருடைய உடன் பிறப்பான ராஜபக்ச ஆட்சியின் போதுதான் ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல்கள், மற்றும் படுகொலைகள் மூர்க்கத்தனமான முறையில் அரங்கேறியது.  அப்போது கோத்தபய ராஜபக்ச தான் ராணுவ தளபதியாக இருந்து இறுதிகட்ட போர் என்கிற பேரில் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் கொல்லப்பட்டனர்.  சர்வதேச அளவில் போர்க்குற்றம் என்கிற வகையில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்கிற குரல்களும் அவ்வப்போது எழுவது உண்டு.

இந்த நிலையில்தான் தற்போது கோத்தபய ராஜபக்ச அதிபராகி உள்ளார்.  தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே, இந்த வெற்றியை நம் மக்கள் அமைதியுடன் கொண்டாட வேண்டும் என்றார்.  அத்துடன் இந்த வெற்றிக்கு அனைத்து மக்களும் ஆதரவு அளித்துள்ளனர் என்று பேசிய நிலையில், பதவி ஏற்பு விழாவில் இனத்தை குறிப்பிட்டு நன்றி சொன்னதை தவிர்த்து இருக்கலாம்.  கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் விழாவில் கிறித்தவ தேவாலயம் பயங்கரவாதிகளால், மனித வெடிகுண்டுகள் மூலம் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் நடவடிக்கையால் இலங்கை மக்களுக்கு கடந்த ஆட்சியாளர்கள் மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. இந்த நிலையில், ஈழத்தமிழர்களின் உரிமைக்காக 30 வருடங்களுக்கு மேல் போராடிய விடுதலைப் போராளிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர் கோத்தபய ராஜபக்ச. இவர் அதிபர் ஆனால்தான் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு முறியடிப்பார் என்கிற நம்பிக்கையில் மாபெரும் வெற்றி என்றில்லாமல் 2 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றவர் கோத்தபய ராஜபக்ச.

இதில் இன்னொரு அம்சமும் கவனிக்க வேண்டி உள்ளது.  இலங்கையில் இது வரையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 35 பேர் போட்டியிட்டதில்லை! இந்த வேட்பாளர்கள் 5.76 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார்கள்.  எனவே அதீத வெற்றி என்றெல்லாம் புதிய அதிபர் கருத்தில் கொள்ளாமல், இலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்வதுதான் சிறப்பாக இருக்க முடியும்.  மேலும் இலங்கை ஒரு அண்டை நாடு என்கிற வகையில் இந்தியா, இலங்கையில் நடைபெறும் ஆட்சி ஜனநாயக முறையில்தான் நடைபெறுகிறதா என்று கண்காணிப்பதும் அவசியம். மேலும், சர்வதேச நாடுகளின் அங்கமான ஐ.நா சபையும் இலங்கையில் நடைபெற்ற கடந்தகால  கொடும் நிகழ்வுகளை கவனத்தில் கொண்டு எதிர்வரும் காலத்தில் இலங்கை அரசின் செயல்பாட்டினை கண்காணிப்பதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு தங்களின் பாதுகாப்பு மீதான நம்பிக்கை ஏற்படும்.  அதேநேரம், சீனாவிற்கான ராணுவத்தளமாக இலங்கை மாறிவிடக் கூடாது என்பதையும் இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *