தற்போதைய செய்திகள்

இமய மலைக்கு ஆன்மிகப் பயணம்:பாபா ஆசிரமத்தில், ரஜினிகாந்துடன் பா.ஜனதா தலைவர் சந்திப்பு….

தர்மசாலா, மார்ச்.12-

இமயமலை சென்றுள்ள நடிகர் ரஜினி காந்த் அங்குள்ள பாபா ஆசிரமத்தில் பாரதிய ஜனதா தலைவரும், இமாச்சால பிரதேச முன்னாள் முதல்-அமைச்சருமான பிரேம்குமார் துமாலை சந்தித்துப் பேசினார்.

எம்.ஜி.ஆர். சிலை திறப்பு

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். கடந்த 5-ந்தேதி ரஜினி காந்த் மதுரவாயல் வேலப்பன் சாவடியில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர், ‘‘தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. நான் தீவிர அரசியலில் ஈடுபட்டு வெற்றிடத்தை நிரப்புவேன்’’ என்றார். மேலும் எம்.ஜி.ஆர். தனக்கு செய்த உதவிகளை நினைவு கூர்ந்த அவர் எம்.ஜி.ஆர். புகழ்பாடி பாராட்டிப் பேசினார்.

பாபா ஆசிரமத்தில் தியானம்

இந்த நிலையில் ரஜினி காந்த் தனது படங்கள் சம்பந்தப்பட்ட பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து ஓய்வு எடுப்பதற்காகவும், ஆன்மிக பயணமாகவும் நேற்று முன்தினம் இமயமலை சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற ரஜினிகாந்த் அங்கிருந்து மற்றொரு விமானத்தில் இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லா வழியாக தர்மசாலா போய்ச் சேர்ந்தார்.

இது காஷ்மீர் மற்றும் திபெத் எல்லையையொட்டியுள்ள பகுதியாகும். தர்ம சாலாவையொட்டி பனி படர்ந்த மலைப்பிரதேசத்தில் கன்ட்பாடி என்ற சிறிய மலைகிராமம் உள்ளது. அங்கு பாபா ஆசிரமமும், தியான மண்டபமும் உள்ளது. இந்த ஆசிரமத்துக்கு சென்ற ரஜினிகாந்த் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அதன்பிறகு தியான மண்டபத்துக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார்.

பா.ஜனதா தலைவர் சந்திப்பு

ரஜினிகாந்த் திபெத்தியர்கள் அணியும் தொப்பி அணிந்து இருந்தார். தியான மண்டபத்தில் இருந்த ரஜினிகாந்த்தை இமாச்சலப்பிரதேச மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான பிரேம்குமார் துமால் சந்தித்துப் பேசினார். ரஜினியின் அரசியல் மற்றும் ஆன்மீக பயணம் குறித்து இருவரும் பேசினார்கள்.

ரஜினியை ஆசிரம நிர்வாகியும் சாமியாருமான பாபா அமர்ஜோதியும் சந்தித்தார் .இங்கு சில நாட்கள் இருந்து விட்டு உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள பாபா குகைக்கு சென்று ரஜினி வழிபடுகிறார்.

அரசியல் அறிவிப்பு

அங்கு ரஜினிகாந்த் ஆசிரமம் கட்டியுள்ளார். பல்வேறு பணிகளால் அதன் திறப்பு விழாவுக்கு ரஜினிகாந்த் செல்லவில்லை. இந்தப் பயணத்தின் போது அவர் ஆசிரமத்துக்கு சென்று தங்குகிறார். சில வாரங்கள் கழித்து சென்னை திரும்பியதும் ரஜினிகாந்த் தனது அரசியல் முடிவு பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறார்.
Leave a Reply