BREAKING NEWS

இந்த வார பங்கு வர்த்தகத்தை பாரத ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்ளை முடிவு செய்யும் – பொருளாதார ஆய்வாளர்கள் முன்னறிவிப்பு.

சர்வதேச காரணிகள்

உலக நாடுகளின் வர்த்தகத்தில் இழுபறி நிலை காணப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் தொடர் அதிகரிப்பை கண்டு வந்த கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 மாத சரிவில் இருந்து மீண்டது. இவையே கடந்த வார பங்கு வர்த்தகத்திற்கு சாதகமாக அமைந்தது.

நடப்பு 2018ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் முன்பு மதிப்பிட்டிருந்த நிலையில், அதனை 7.3 சதவீதமாக குறைப்பதாக தெரிவித்தது. இது, முதலீட்டாளர்களின் மத்தியில் உற்சாகத்தை குறைத்தது.

இந்திய சந்தைகள்

மேலும், கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பால் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதும் சந்தைகளில் மந்த நிலையை ஏற்படுத்தியது. இது தவிர, மே மாதத்தில் உள்நாட்டு தயாரிப்பு துறை நடவடிக்கைகளில் சுணக்கம் காணப்பட்டது.

இதனால், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்று வெளியேறியதில் பல நாடுகளின் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. இருப்பினும், உள்நாட்டு நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து அவற்றின் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளில் அவ்வளவாக உணரப்படவில்லை.

கடந்த வார நிலவரம்

கடந்த வாரத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்கள் 2.90 சதவீதம் அதிகரித்தன. இருப்பினும் நுகர்வோர் சாதனங்கள் துறை குறியீட்டெண் 2.54 சதவீதமும், தகவல் தொழில்நுட்பம் 1.65 சதவீதமும், தொழில்நுட்பம் 1.53 சதவீதமும், ரியல் எஸ்டேட் துறை குறியீட்டெண் 1.28 சதவீதமும் சரிவடைந்தன.

நிறுவனங்களைப் பொருத்தவரையில் பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா பங்கின் விலை அதிகபட்சமாக 6.56 சதவீதம் உயர்ந்தது. அதேசமயம், டி.சி.எஸ்., பங்கின் விலை 51.74 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இதைத் தொடர்ந்து, பவர் கிரிட் 2.85 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 2.38 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 2.36 சதவீதமும், டாக்டர் ரெட்டீஸ் 1.54 சதவீதமும், விப்ரோ 1.49 சதவீதமும், ஓ.என்.ஜி.சி., 1.37 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி பங்கின் விலை 1.31 சதவீதமும் சரிவடைந்தன.

நாணய கொள்கை கூட்டம்

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 302 புள்ளிகள் அதிகரித்து 35,227 புள்ளிகளில் நிலைத்தது. இப்பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.16,759.27 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிப்டி 91 புள்ளிகள் உயர்ந்து 10,696 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.1,79,457.86 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமையில், நிதிக் கொள்கை கூட்டம் நடக்கிறது. இதன் முடிவுகள் பங்கு சந்தையின் போக்கை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த கூட்டத்தில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பெட்ரோல், டீசல் எரிபொருள் விலைகள் குறித்தும் சில முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.




Leave a Reply