BREAKING NEWS

இந்திய பொருளாதாரம் பாதாளத்தில் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்

இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்தில் செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சருக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொருளாதார சரிவு

இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமான பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருப்பது குறித்து கருத்து கூறிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இத்தகைய ஏற்றம் – இறக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்று என்று பொறுப்பில்லாமல் கூறுவது வேதனை. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் பெருகியிருக்கிறது. இதற்கு காரணம் பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகள்.

இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் ரூபாயாக உயர்த்த மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்தது 12 சதவீதமாக இருக்க வேண்டும். 5 சதவீதத்திற்கும் கீழே சென்று கொண்டிருக்கிற இந்திய பொருளாதாரத்தை 12 சதவீதமாக ஆக்குவதற்கு நரேந்திர மோடி என்ன மந்திரம் வைத்திருக்கிறார்?

கடன்சுமை

தனிநபர் நுகர்வு 18 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதை நிதியமைச்சர் உணரவில்லை. ஆனால், மத்திய அரசின் ஒட்டுமொத்த செலவு 14 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கட்டுமானத் தொழில் 9.6 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடுமையான கடன் சுமையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் ரூபாய் 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி கடன் சுமை ஏற்பட்டிருக்கிறது. இது 2014-15ல் ரூபாய் 3,343 கோடியாகத் தான் இருந்தது. இந்த கடன் சுமை ஏறிய பிறகு நெடுஞ்சாலைத்துறை மூலமாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியுமா? ஆண்டுதோறும் ரூபாய் 14 ஆயிரம் கோடி கடன் கட்டுகிற நிலையில் நெடுஞ்சாலைத்துறையில் வளர்ச்சி ஏற்படுத்துவது சாத்தியமா?

தடுக்க வேண்டும்

கடந்த ஜனவரியில் மொத்த வாகன விற்பனை 1 லட்சத்து 89,087. ஆனால், கடந்த ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 51,467 ஆக இது குறைந்திருக்கிறது. இது 23 சதவீத வீழ்ச்சி. இதனால் 2 லட்சத்து 80 ஆயிரம் தொழிலாளர்கள் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பை இழந்திருக்கிறார்கள்.

எனவே, இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் அதள பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply