BREAKING NEWS

இந்திய அணியா? பி.சி.சி.ஐ., அணியா? கேள்வி எழுப்பும் மத்திய தகவல் ஆணையம்.

 

 


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ), தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) வரம்பின் கீழ் ஏன் கொண்டு வரக்கூடாது என்று மத்திய தகவல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னதாக, தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள்ளாக பிசிசிஐ அமைப்பைக் கொண்டுவர இயலுமா என்பது குறித்து பரிந்துரைக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த 2016 ஜூலையில் சட்ட ஆணையத்திடம் கேட்டிருந்தது. இதையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ), தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) வரம்பின் கீழாகக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையம் வலியுறுத்தியது.

தகவல் அறியும் உரிமை சட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், அதன் உறுப்பினர்களாக இருக்கும் மாநில கிரிக்கெட் சங்கங்களும் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பில் கொண்டு வரப்பட வேண்டும். இந்தியாவில் ஓர் அங்கமாக இருக்கும் பிசிசிஐ, வரி விலக்கு மற்றும் நில ஒதுக்கீடு ஆகிய வடிவங்களில் அரசிடம் இருந்து போதிய நிதியுதவிகளைப் பெறுகிறது. பிசிசிஐ, தனியாதிக்கச் செயல்பாட்டுடன் இருந்தாலும், பொது மக்கள் சார்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், தன்னை ஒரு தனியார் அமைப்பாக காட்டிக் கொள்ளும் அதை, ஒரு பொதுத் துறையாகக் கருதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர இயலும்.

தேசிய விளையாட்டு சம்ளேனமா?

பிசிசிஐ, அரசிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடிகள் வரிச் சலுகைகளை அனுபவித்து வருகிறது. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், 1997-2007 காலகட்டத்தில் ஏறத்தாழ ரூ.2,168.5 கோடி அளவுக்கு வரிச் சலுகைகளை பெற்றுள்ளது. இதனிடையே, கடந்த 2007-08 காலகட்டத்தில், வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 12ஏ-வின் கீழ் தொண்டு நிறுவனமாக பிசிசிஐ பதிவு செய்யப்பட்டிருந்தது திரும்பப் பெறப்பட்டுள்ளது. பிசிசிஐ, ஒரு தேசிய விளையாட்டு சம்மேளனம் போலவே செயல்படுகிறது.

கேள்வி எழுப்பிய தகவல் ஆணையம்

இந்நிலையில் மத்திய தகவல் ஆணையமும் இதே விவகாரத்தில் பிசிசிஐயிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ அமைப்பை ஏன் கொண்டுவரக்கூடாது என்று கேள்வியெழுப்பியதோடு இதற்கு விளக்கமும் அளிக்கும்படி பிசிசிஐ மற்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

எதன் அடிப்படையில் பிசிசிஐயும் அதன் வீரர்களும் இந்தியா சார்பாக விளையாடுகிறார்கள் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கீதா ராணி என்பவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உரிய பதிலை அளிக்கவில்லை. இதையடுத்து இந்தக் கேள்வி, மத்திய தகவல் ஆணையத்திடம் சென்றது.

கடிதம்

எனினும் மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் ஸ்ரீதர் ஆச்சர்யலு இதுபற்றிக் கூறும்போது, அவருடைய கேள்வி இது இந்திய அணியா அல்லது பிசிசிஐ அணியா என்பதுதான். எதன் அடிப்படையில் இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்கிறது என்கிற கேள்வியை இதன்மூலம் முன்வைக்கிறார். இதுதொடர்பான நிலையற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய பொறுப்பு தகவல் ஆணையத்துக்கு உள்ளது. சட்ட ஆணையம் பரிந்துரை செய்தபிறகும் விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்குப் பல சந்தேகங்கள் உள்ளன என்று கூறியுள்ளார். இதையடுத்து பிசிசிஐ அமைப்பை ஏன் பொதுத்துறையாக கருதக்கூடாது என்று கேள்வியெழுப்பி அதற்கு விளக்கம் அளிக்க பிசிசிஐக்கும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கும் மத்திய தகவல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.




Leave a Reply