தற்போதைய செய்திகள்

இந்தியாவில் வால்மார்ட் என்ன செய்ய போகிறது?

இந்தியாவில் வால்மார்ட் என்ன செய்ய போகிறது?

சந்தைகளை கபளீகரம் செய்யும் திட்டம் பலிக்குமா?
ஜெர்மனியில் இருந்து துரத்தப்பட்ட நிலையில்
உலகின் நம்பர் ஒன் ‘சில்லரை வர்த்தக ஒப்பந்தம்’ இரண்டு நிறுவனங்களுக்கு இடையே முறைப்படி சமீபத்தில் கையெழுத்தாகி விட்டது. உலகின் நம்பர் ஒன் வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டும், பிலிப்கார்ட் நிறுவனமும் இந்த புதிய ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன.

வால்மார்ட் அடிப்படையில் ஒரு அமெரிக்க நிறுவனம். 1962 ம் ஆண்டு சாம் வால்டன் என்ற அமெரிக்கரால் துவங்கப் பட்டது. இந்த நிலையில் அடுத்த 10 ஆண்டுக்குள் மளிகை சாமான்கள் கடைகளை உலகின் பல நாடுகளில் ஆரம்பித்து விட்டது. தற்போது 1.1.2018 ன் படி 28 நாடுகளில் வால்மார்ட் மளிகை கடைகளை நடத்திக் கொண்டிருக்கிறது.

தற்போது 28 நாடுகளில் 11 ஆயிரத்து 718 மளிகை கடைகளையும், குளிர்பதன ஊட்டப்பட்ட கிட்டங்கிளையும் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த 11 ஆயிரத்து 718 கடைகளும் 50 வெவ்வேறு பெயர்களில் நடத்தப் படுகிறது. ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் பார்த்தால் 1 லட்சத்து 10,500 கோடி ஆகும்.

இதில் தான் 77 சதவிகித பங்குகளை வால்மார்ட் வாங்கி விட்டது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் 1 லட்சத்து, 4,000 கோடியாகும். இந்த ஒப்பந்தம் முறைப்படி இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்து ஆகிவிட்டது.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை மூர்த்தனமாக கடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலங்களில் எதிர்த்து வந்த பாஜக அரசு தற்பொழுது பின்வாசல் வழியாக சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்து விட்டது. இந்த ஒப்பந்தம் இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தை நம்பி சிறு சிறு கடைகள் மூலம் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் 5 கோடி குடும்பங்களை ஏதாவது ஒரு விதத்தில் கண்டிப்பாக பாதிக்கும் என்றே பரவலாக கருதப் படுகிறது.

ஏனெனில் அடிமாட்டு விலைக்கு மளிகை சாமான்கள் மற்றும் இதர பிற பொருட்கள் மக்களுக்கு கிடைக்க ஆரம்பித்து விடும். இதில் மற்றுமோர் மிக, மிக முக்கியமான விஷயம், சீன பொருட்கள் வெள்ளம் போல் வந்து இந்திய சந்தைகளை கதி கலங்க வைக்கப் போகின்றன என்பதுதான்.

வால்மார்ட் எந்த பொருளையும், தானாக உற்பத்தி செய்வதில்லை. மாறாக சில நாடுகளிடம் இருந்து வாங்கித் தான் இந்த பொருட்களை உலகின் பல நாடுகளுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் மிக முக்கிய பங்கு சீன பொருட்களுக்குத் தான். அமெரிக்காவில் 2017 ல் வால்மார்ட் நிறுவனம் செய்த வியாபாரம், இந்திய ரூபாயில் பார்த்தால், 20 லட்சத்து, 60 ஆயிரத்து, 500 கோடி ரூபாய்கள்.

இதில் சீனாவில் உற்பத்தியான பொருட்களின் பங்களிப்பு 70 முதல் 80 சதவிகிதமாகும். வால்மார்ட் ன்னுடைய தொழிலாளர்களை, குறிப்பாக ஆசிய நாடுகளில் தன்னுடைய தொழிலாளர்களை நடத்தும் முறை சர்வதேச அளவில் கடும் கண்டனத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக பங்களாதேஷ் நாட்டில் வால்மார்ட் நிறுவனத்துக்கு ஆடைகளை உற்பத்தி செய்து கொண்டிருந்த ஒரு நிறுவனத்தில் பெருந் தீ விபத்து ஏற்பட்டு இதில் 112 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். ‘இறந்தவர்களுக்கும், காயம் அடைந்துவர்களுக்கும், நாங்கள் எந்த இழப்பீடும் தர மாட்டோம்’ என்று வால்மார்ட் நிறுவனம் அறிவித்தது.

காரணம் அந்த குறிப்பிட்ட ஆடை தயாரிக்கும் நிறுவனத்துக்கு தாங்கள் நேரடியாக அனுமதி கொடுக்கவில்லை என்றும், மாறாக தாங்கள் இதற்காக முறையான அனுமதியை கொடுத்த ஒரு நிறுவனம், தீ விபத்து ஏற்பட்ட நிறுவனத்துக்கு “துணை ஒப்பந்தம் (சப் கான்ட்டிராக்ட்)” கொடுத்து விட்டது.

இது வால்மார்ட் நிறுவனத்தின் சட்ட, திட்டங்களுக்கு மாறானது. எங்களிடம் கான்ட்ராக்ட் பெற்றவர்கள் அவர்கள் தான் சம்மந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். அந்த நிறுவனத்தில் இது போன்ற துயர சம்பவங்கள் நடந்தால் தான் நாங்கள் நஷ்டஈடு கொடுக்க முடியும்.

மாறாக துணை ஒப்பந்தம் பெற்ற நிறவனங்களுக்கு நாங்கள் நஷ்ட ஈடு கொடுக்க முடியாது. எங்களது சட்ட, திட்டங்களில் இது தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று கையை விரித்து விட்டது வால்மார்ட். மற்றோர் சுவாரஸ்யமான தகவல் வால்மார்ட் நிறுவனத்துக்கு ஐரோப்பிய நாடுகளிடம் கிடைத்துக் கொண்டிருக்கும் எதிர்ப்பு.

உதாரணத்துக்கு ஜெர்மனி நாட்டில் வால்மார்ட் நிறுவனம் சந்தித்த புதிய விதமான பிரச்சினைகள். இந்த பிரச்சினைகளால் ஜெர்மன் மக்களும், அங்கு வால்மார்ட்டில் பணியாற்றிய தொழிலாளர்களும் மட்டுமின்றி ஜெர்மன் அரசாங்கமே வால்மார்ட்டை ஜெர்மனியில் இருந்து விரட்டி அடித்தது.

ஜெர்மனியில் என்ன நடந்தது என்றால் வால்மார்ட் நிறுவனம் தன்னுடையை தொழிலாளர்கள், பொருட்களை வாங்கி விட்டு மக்கள் கடையில் இருந்து வெளியேரும் போது, அந்தக் கடையின் வாயிலில் இருக்கும் வால்மார்ட் ஊழியர்கள் அவர்களை பார்த்து சிரிக்க வேண்டும் என்பது.

ஜெர்மானியர்கள் சாதாரணமாக முகந் தெரியாதவர்களை பார்த்து சிரிக்க மாட்டார்கள். இவ்வாறு வால்மார்ட் தொழிலாளர்கள் சிரிக்கும் போது அந்த சிரிப்பு தங்களை கேலியும், கிண்டலும் செய்வதாக ஜெர்மானியர்கள் உணர துவங்கினர்.

இது ஜெர்மானியர்களிடம் ஒரு வித கோபத்தையும் ஏற்படுத்தி விட்டது. மற்றோர் விஷயம் வால்மார்ட் ஊழியர்கள் அனைவரும் ஒவ்வோர் நாளும் தங்களது ஷிப்ட் துவங்குவதற்கு முன்பாக, உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் ‘‘வால்மார்ட், வால்மார்ட், வால்மார்ட்’’ என்று 3 முறை தொடர்ந்து கத்த வேண்டும் என்பது.

இன்னுமோர் விஷயம் வால்மார்ட் ஊழியர்கள் தங்களது சக ஊழியர்களை வேவு பார்க்க வேண்டும் என்று கடுமையாக நிர்ப்பந்திக்கப்படுவது. மற்றொன்று தங்களது ஊழியர்கள் எந்த விதமான பாலியியல் உறவிலும், நிறுவனத்துக்கு வெளியேயும் ஈடுபடக் கூடாது என்ற கட்டுப்பாடு. இதுபோன்ற பல்வேறு நிர்பந்தங்கள் ஜெர்மானியர்களிடையே ஏற்படுத்திய கொந்தளிப்பு, வால்மார்ட்டை ஜெர்மனியில் இருந்து வெளியேற்றியது. இந்தியாவில் வால்மார்ட்டின் வருகை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

——-
Leave a Reply