BREAKING NEWS

இடைத்தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் பேட்டி

இடைத்தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் கருத்து தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், நாங்குநேரி தொகுதியில் தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிட உள்ளார். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் நாங்குநேரி தேர்தல் தொடர்பாக நெல்லையில் கட்சி நிர்வாகிககளிடம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

பிரதமர் மறுக்காதது ஏன்?

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிவை தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே உற்று நோக்குகிறது. தமிழக அரசு ஊழல் அரசாக, செயல்படாத அரசாக உள்ளது. நாங்குநேரி தொகுதியில் 11 அமைச்சர்களும், ஏராளமான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் முகாமிட்டுள்ளனர். இத்தனை நாட்களாக வராமல் தேர்தலுக்காக மட்டுமே வருவது ஏன்? பண பலம், ஆள் பலம், இல்லாததை இருப்பதுபோல் காட்டும் செயல் ஆகியவற்றை மட்டுமே அ.தி.மு.க. நம்பியுள்ளது.

கடந்த 45 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுககு வேலையில்லாத் திட்டாட்டம், வேலை இழப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் மோடியை தேசப்பிதா என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டியுள்ளார். இதை மோடி மறுக்காதது ஏன்? சுதந்திரத்துக்குப் பின் பிறந்த மோடி எப்படி தேசப்பிதா ஆக முடியும். பா.ஜ.க.வினர் காந்தியை பாராட்டி, கோட்சேவின் கொள்ளைகளை பின்பற்றுகின்றனர்.

சர்வாதிகார நிலை

அ.தி.மு.க. அரசு 2 முறை உலக முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியது. ஆனால், எவ்வளவு முதலீடுகள் வந்தன? முதலீடுகளை ஈர்க்க முதல்வரும் அமைச்சர்களும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏன்? பிரதமரை சந்தித்து, தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத சர்வாதிகார நிலையை நோக்கி நாட்டை கொண்டு செல்கின்றனர். இதை சுட்டிக்காட்டிய 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே அரசியல் கட்சி என்ற நிலையை உருவாக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது.

சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

மக்களுக்கு எதிரான திட்டங்களை ஜெயலலிதா துணிந்து எதிர்த்தார். ஆனால், முதல்வர், துணை முதல்வர் மக்களுக்கு எதிரான பா.ஜ.க. அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். மோடியின் கைப்பாவையாக உள்ளனர். பா.ஜ.க.வின் முகமூடியாக செயல்படுகின்றனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் தனது தனித்துவத்தை நாட்டுக்கே எடுத்துக் காட்டியது. இப்போதும் அதை மெய்ப்பிக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கு சமமானது. எனவே, இந்த இடைத்தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *