BREAKING NEWS

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியை அறிவித்த ஷேன் வார்ன்

அடுத்த வியாழனன்று எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் முதல் ஆஷஸ் டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை ஷேன் வார்ன் தன் தரப்பில் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

விக்கெட் கீப்பர் கேப்டன் டிம் பெய்ன் இருக்கும் போதே மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனான மேத்யூ வேடையும் ஷேன் வார்ன் தன் அணியில் தேர்வு செய்துள்ளார். காரணம் மேத்யூ வேட் ஷெபீல்ட் ஷீல்ட் உள்நாட்டு போட்டித் தொடரில் 1021 ரன்களை 60.05 என்ற சராசரியில் எடுத்ததே என்கிறார் வார்ன்.

இவருடன் டேவிட் வார்னர், ஸ்மித், இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி நிலையாக ஆடிய தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ட்ராவிஸ் ஹெட் ஆகியோரையும் தன் ஆஷஸ் ஆஸி. அணியில் குறிப்பிட்டுள்ளார் ஷேன் வார்ன்.

தன் ட்விட்டரில் அவர் ‘என் ஆஷஸ் ஆஸ்திரேலியா அணி’ என்று வெளியிட்ட அணி வருமாறு:

வார்னர், ஹாரிஸ், கவாஜா, ஸ்மித், ஹெட், மேத்யூ வேட், டிம் பெய்ன், பேட்டின்சன், கமின்ஸ், லயன், ஸ்டார்க்/ஹேசில்வுட் என்ற லெவனுடன் கூடுதலாக விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, பவுலர் ரிச்சர்ட்சன், பேங்கிராப்ட், மிட்செல் மார்ஷ் மற்றும் பியுகோவ்ஸ்கி என்ற வீரர்களையும் ஆஸ்திரேலியா ஆஷஸ் லெவனில் அறிவித்துள்ளார்.

அதோடு இங்கிலாந்து வீரர்கள் பற்றியும் அதிகப் பரிச்சயம் இருப்பதால் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணியையும் தன் ட்விட்டரில் வார்ன் அறிவித்துள்ளார், அந்த அணி வருமாறு:

ஜேசன் ராய், கிராலி, பேர்ஸ்டோ, ரூட், ஸ்டோக்ஸ், பட்லர், பென் ஃபோக்ஸ் (வி.கீ), மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், பிராட், ஆண்டர்சன், மார்க் உட்.




Leave a Reply