BREAKING NEWS

ஆளும்கட்சிக்கு எதிராக ஆளுநனரிடம மனு அளித்த 18 எம்.எல்.ஏ.க்கள்: அ.தி.மு.க.வில் இணைந்தால் வரவேற்போம் –  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி.

 

தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தால் பாராட்டுக்குரியது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தகுதி நீக்கம்

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த 18 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்பட்டு வருவது தெரிந்ததே. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும், இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததும் தெரிந்ததே.

மாறுபட்ட தீர்ப்பு

இந்த வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதில், ‘தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியே’ என்று ஒரு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். ‘எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது’ என்று நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில் சுட்டிகாட்டினர். இதையடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் காரணமாக அ.தி.மு.க. அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியும் குறைந்தது.

வழக்கு வாபஸ்?

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து, டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான தங்கதமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்தபோது, ‘மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வழங்கினாலும் அது அரசுக்கு சாதமாக தான் இருக்கும் என்று நம்புகிறேன். வழக்கும் உடனடியாக முடியக்கூடிய நிலையில் இருக்காது எனவே தான் நான் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தேன். இதை டி.டி.வி.தினகரனும் ஏற்றுக் கொண்டார். மற்ற 17 எம்.எல்.ஏ.க்களுக்கும் கூடி முடிவு எடுப்பார்கள்’ என்றார்.

முதல்வர் பேட்டி

இதற்கிடையே, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் சிலர் அ.தி.மு.க.வில் இணைவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், நேற்று திருச்சி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது, நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

கேள்வி: தங்கத்தமிழ்ச்செல்வன் உட்பட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 8 எம்.எல்.ஏ-க்கள் உங்கள் அணியில் இணையப் போவதாக சொல்கிறார்களே, உண்மையா?

பதில்: தெரியவில்லை, நீங்கள்தான் சொல்கிறீர்கள், வந்து இணைந்தால் பாராட்டுக்குரியதுதான்.

எப்படி முடியும்

கேள்வி: அவர்கள் வந்தால், அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக சொல்லப்படுகிறதே?

பதில்: எப்படி அமைச்சர் பதவி கொடுக்க முடியும்? நீங்கள் எல்லோரும் விவரம் தெரிந்தவர்கள், நீங்கள்தான் பத்திரிகையில் வெளியிடுகிறீர்கள், பெரும்பாலான மக்களும் இதைப் பார்த்து, படித்துத்தான் தெரிந்து கொள்கிறார்கள். அப்படியிருக்கும்போது, சட்டரீதியாக உங்களுக்குத் தெரியும்.

எப்படி இடைத்தேர்தல் வரும்?

கேள்வி: இடைத்தேர்தல் வரவேண்டுமென்பதற்காக டி.டி.வி.தினகரன் அணி திட்டமிட்டு செய்வதாக சொல்கிறார்களே?

பதில்: நீங்கள் தான் சொல்கிறீர்கள், அப்படி எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஏனென்றால், சட்ட ரீதியாக அனைத்துமே தெரியும். இன்றைக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது எப்படி இடைத்தேர்தல் வரும்?

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply