BREAKING NEWS

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது –  எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் கைது.

நாமக்கல்லில் ஆளுநருக்கு தி.மு.க.வினரை கைது செய்ததைக் கண்டித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் கைது ெசய்யப்பட்டார். அவருடன் எம்.எல்.ஏ.க்களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தி.மு.க.வினர் கைது

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்கு, தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநருக்கு, தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆளுநர் மாளிகை முற்றுகை

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை தி.மு.க.வினர் நடத்தினர். இதில், கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மத்திய அரசினுடைய ஏஜெண்டாக தமிழக ஆளுநர் செயல்படுகிறார். மாநில உரிமைகளை கொச்சைப்படுத்தக்கூடிய வகையில், தமிழக ஆளுநர் தொடர்ந்து செயல்படுகிறார். அதனை கண்டிக்கும் வகையில், ஆளுநர் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வுக்குச் செல்லும் நேரத்தில் தி.மு.க. சார்பில் தொடர்ந்து கருப்புக்கொடி காட்டி கண்டனத்தை தெரிவிக்கிறோம். இதுநாள் வரையில், கருப்புக்கொடி காட்டியவர்களை கைது செய்யவில்லை. ஆனால், திடீரென்று நேற்று (நேற்று முன்தினம்) ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய நம் தோழர்களை, கைது செய்து சேலம் சிறையில் அடைத்துள்ளனர்.

ஆளுநருக்கு கண்டனம்

இதுவரை கைது நடவடிக்கையில் ஆளுநரும், இந்த அரசும் ஈடுபடவில்லை. ஆட்சியாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் செய்ய வேண்டிய வேலையை ஆளுநர் செய்கிறார். இது வன்மையாக கண்டிக்கக்கூடிய ஒன்று. நம் உரிமையை பறிக்கக்கூடிய சூழ்நிலை இன்றைக்கு உருவாகி இருக்கிறது. ஆளுநர் எங்கே சென்றாலும், கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்தி கைதாகி இருக்கிறோம். பின்னர், மாலையிலே விடுதலை செய்வதைதான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாங்கள் விடுதலை செய்யுங்கள் என்று மண்டியிட்டு கேட்பதற்கு தயாராக இல்லை.

போராட்டம் தொடரும்

ஒரு ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போராட்டத்தைதான் செய்கிறோம். ஆனால், திடீரென்று கைது செய்து சிறையிலே அடைத்து இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஈடுபட்டு வரும் ஆளுநர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும். எனவே, இந்த போராட்டத்தை நடத்துகிறோம். உங்களுக்கு தைரியம் இருந்தால், எங்களை சிறையில் அடைக்க வேண்டும். மாலையில் விட்டுவிட்டால் கூட, அடுத்தகட்ட போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருப்போம்.

மு.க.ஸ்டாலின் கைது

இவ்வாறு அவர் பேசினார். பின்னர், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் அனைவரும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது, தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, ஜெ.அன்பழகன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரும், 500க்கும் மேற்பட்ட தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.




Leave a Reply