BREAKING NEWS

ஆளுநர் ஆய்வு தொடர்பான விவகாரத்தில் சபாநாயகர் – அமைச்சர் கடும் வாக்குவிவாதம்.


ஆளுநர் ஆய்வு பற்றி விவாதிப்பது தொடர்பாக, சபாநாயகர் தனபாலுக்கும், அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தி.மு.க. வெளிநடப்பு

சட்டசபையில் நேற்று நேரமில்லா நேரத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆய்வு குறித்து ஒரு கேள்வி எழுப்பினார். அப்போது, குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் தனபால், ஆளுநர் நடவடிக்கைகள் பற்றி அவையில் பேசக்கூடாது என்று விதி உள்ளது. அதனால், அதைப் பற்றி பேசவேண்டாம் என்று கூறினார். சபாநாயகர் பேச அனுமதி மறுத்ததையடுத்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

அமைச்சர் விளக்கம்

அப்போது, அது தொடர்பாக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசுகையில், ‘எதிர்கட்சித் தலைவர் மாநில சுயாட்சி குறித்து பேசினார். அதுகுறித்து விளக்கம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்’ என்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், அமைச்சருக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது. நான் சொல்வது, அதுபற்றி பேச வேண்டாம் என்றார்.

அப்போது, மீண்டும் பேசிய அமைச்சர், நான் சொல்வது என்ன என்பது உங்களுக்கு எப்படி புரியும்? நான் சொன்னால்தானே புரியும். என்றார்.

சபாநாயகர் மறுப்பு

மீண்டும் பேசிய சபாநாயகர், நீங்கள் புது பிரச்சினையை கிளப்புறீங்க. அவை ேநரத்தை வீணாக்க வேண்டாம் என்றார். அப்போது மீண்டும் பேசிய அமைச்சர், நான் புது பிரச்சினைக்கு போகவில்லை. நான் எதிர்கட்சித் தலைவர் சொன்னதற்கு பதில் சொல்ல விரும்புகிறேன். புது விஷயம் ஒன்றும் நான் சொல்லவில்லை என்றார்.

அப்போது, மீண்டும் பேசிய சபாநாயகர், நீங்கள் எதாவது ஒன்று சொன்னால் அது அவையில் பதிவு செய்ய வேண்டி வரும் என்றார்.

வாதம்

ஆனால் சபாநாயகரின் அறிவுரையை ஏற்காமல், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீண்டும், தமிழக அரசியல் வரலாற்றில், தமிழக கவர்னர் நடவடிக்கைகளில், ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்லபோகிறேன். அது ஏன் வேண்டாம் என்கிறீர்கள்? என்றார்.

மீண்டும் பேசிய சபாநாயகர், ஆளுநரை பற்றி பேசவேண்டாம் என்று நான் அவர்களுக்கு உத்தரவு போட்டு உள்ளேன். அதிகாரிகளை பற்றி பேசியதாலே அந்த விளக்கத்தை தெரிவித்தேன். அந்த விளக்கத்தை அவர்கள் ஏற்கவில்லை. ஆகையால் அவர்கள் வெளியேறிவிட்டனர். அதோடு அதை விட்டுவிடுங்கள் என்றார்.

அமைச்சர் ஆவேசம்

மீண்டும் சற்று ஆவேசமாக பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நான் பேசுவதில் தவறு ஏதும் இருந்தால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுங்கள்’ என்றார். அப்போது பேசிய சபாநாயகர், அமைச்சர் பேசிய பிறகு அதை நீக்கினால், அது சரியா வருமா? என்றார்.

மீண்டும் பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், பேச வருவதற்கு முன்பாகவே மறுக்கிறீர்கள். நான் முக்கியமான விஷயத்தை சொல்ல வருகிறேன் ஒரு நிமிடம் அனுமதி தாருங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்.

அப்போது பேசிய சபாநாயகர், எனக்கு சரியா படவில்லை என்றால், நான் அதை நீக்க வேண்டி வரும் ஆகையால் அது வேண்டாம் என்றார்.

துணை முதல்வர் உத்தரவு

அப்போது, எழுந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநரைப் பற்றி அவையில் விவாதிக்கக்கூடாது என்று சபாநாயகர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். எனவே, அமைச்சர்கள், உறுப்பினர்கள் யாரும் ஆளுநரைப் பற்றி விவாதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். இத்துடன் அமைச்சருக்கும், சபாநாயகருக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் முடிவு பெற்றது. சட்டசபையில் சபாநாயகருக்கும், அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற காரசார விவாதத்தால் சற்று நேரம் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.




Leave a Reply