BREAKING NEWS

ஆளுநருக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – எம்.எல்.ஏ. உள்பட 300 பேர் கைது – நாமக்கல்லில் பரபரப்பு.

 

நாமக்கல்லில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆய்வு பணி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் இரவு நாமக்கல்லுக்கு வருகை தந்தார். நேற்று காலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

அப்போது மணிக்கூண்டு, அண்ணாசிலை அருகே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்பு கொடி

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன், மேற்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். தி.மு.க.வினரின் கருப்பு கொடி போராட்டத்தின் மத்தியிலேயே சாலையில் திரண்டு இருந்த பொதுமக்களை நோக்கி ஆளுநர் தனது கைகளை அசைத்தபடி காரில் சென்றார்.

ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கோ‌ஷம் எழுப்பினார்கள். இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி, 31 பெண்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தூய்மை இந்தியா

இதையடுத்து நாமக்கல் பேருந்து நிலைய வளாகத்தில் தூய்மை இந்தியா ரதம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜ், பி.ஆர்.சுந்தரம் எம்.பி., ஆட்சியர் ஆசியாமரியம், கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கண்காட்சி

இதனை தொடர்ந்து அங்கு சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, அனைத்து துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கண்காட்சியை பார்வையிட்டார்.

மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கில் ஆளுநர் வரவேற்கும் விதமாக நவதானியங்கள் கொண்டு பொம்மை உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த நவதானிய பொம்மையை பார்த்து கவர்னர் மகிழ்ச்சி அடைந்து, துறை ஊழியர்களை பாராட்டினார்.




Leave a Reply