BREAKING NEWS

ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.


 

துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், யூனியன் பிரதேசங்களில் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இல்லை என்பதை சுட்டிக் காட்டியது. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் முழு அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதிகார மோதல்

இந்தியாவில் 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்க அரசை விட, கவர்னருக்குதான் அதிக அதிகாரம் என்று அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுபோன்ற யூனியன் பிரதேசங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், துணை நிலை ஆளுநர்களே, அதிகாரம் கொண்டவர்களாக உள்ளனர்.

இதனால் இதுபோன்ற மாநிலங்களில் உள்ள முதல்வர்களுக்கும், அம்மாநில ஆளுநர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதுபோன்ற மோதல் போக்கு தலைநகர் டெல்லி முதல் தென்கோடி மாநிலமான புதுச்சேரியிலும் உள்ளது. இதுபோன்ற மாநிலங்களில் பாரதிய ஜனதா மறைமுகமாக ஆட்சி நடத்துகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு

இந்த நிலையில், டெல்லியில் அதிகாரம் யாருக்கு என்ற போட்டி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசுக்கும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் நஜீப்புக்கும் இடையே ஏற்பட்டது. இதையடுத்து இதுகுறித்து ஆம் ஆத்மி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட 5 பேர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது. அந்த தீர்ப்பில் குறித்து வருமாறு:-

பரபரப்பு தீர்ப்பு

அரசியல் சாசனத்தை மதிக்கும் வகையில் அனைவரின் செயல்பாடுகளும் இருக்க வேண்டும். மத்திய – மாநில அரசுகள் கூட்டாட்சி தத்துவப்படி செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் தான் மக்களின் கேள்விகளுக்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள். டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு தனி அதிகாரம் என்று வரையறுக்கப்படவில்லை.

அனைத்து விவகாரங்களிலும் அமைச்சர்கள், கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. காவல்துறை, நிலம், சட்டம் – ஒழுங்கு ஆகியவற்றை தவிர (இந்திய அரசியலமைப்பு சட்டவிதி 239) மற்ற துறைகளில் முழுமையாக முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. மக்கள் நல திட்டங்கள் தாமதமானால் துணை நிலை ஆளுநருக்கும், டெல்லி அரசுக்கும் பொறுப்பு உண்டு.

அதிகாரம் கிடையாது

நீதிமன்ற முந்தைய தீர்ப்புகளின்படி, டெல்லி அரசுக்கு மற்ற மாநிலங்களை போல அதிகாரம் கிடையாது. எனினும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் முடிவுகளுக்கு துணை நிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். துணை நிலை ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையுடன் தான் செயல்பட முடியும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

மேலும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிைணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் கூட்டாட்சி தத்துவத்தை காப்பாற்ற முடியும். இது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்றும் குறிப்பிட்டு உள்ளது.

5 நீதிபதிகள்

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட்4-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் அரசியலமைப்புச் சட்டப்படி டெல்லியில் துணை நிலை ஆளுநர்தான் நிர்வாகத்தின் தலைவர் எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், அசோக்பூஷன் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

——




Leave a Reply