தற்போதைய செய்திகள்

ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. வெற்றி உறுதி அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி…

பொள்ளாச்சி,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேற்று தெரிவித்துள்ளார்.

கோவை, பொள்ளாச்சியில் உள்ள கோலார்பட்டி கிராம மருத்துவமனை கடந்த சில தினங்களுக்கு முன்பு தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த மருத்துவமனைக்காக புதியதாக வாங்கப்பட்ட ஜெனரேட்டர் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் வீட்டுவசதித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த விழாவில் பங்கேற்ற பின்னர், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

வெற்றி உறுதி

தமிழகத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கி வந்தார். அவருக்கு பிறகு தற்போதுள்ள அரசும், அவர் வழியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதி ஜெயலலிதா வெற்றிபெற்ற தொகுதி.

அந்த தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அதிளவிலான வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் கோட்டையாக ஆர்.கே.நகர் தொகுதி உள்ளது. ஆகவே, வரும் இடைத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது உறுதி.

இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார். இந்த விழாவில் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Leave a Reply