ஆபாச இணைய தளங்களைத் தடைசெய்க…!

அண்மையில் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ(Federal Bureau Of Investigation) இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை ஒன்று வழங்கி உள்ளது.  அதில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் பாலியல் ரீதியான வீடியோக்கள் அதிகம் பார்ப்பவர்கள் உலகளவில் இந்தியர்கள்தான் அதிகம் என்கிறது அந்த அறிக்கை.  அதிலும் இந்தியாவிலேயே இந்த மாதிரியான இணையதளங்களைப் பார்வையிடுவோர்  அதிகம் பேர் இருக்கும் இடம் சென்னை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  தமிழகத்தில் யார் யாரெல்லாம் இந்த ஆபாச இணையதளங்களைப் பார்வையிட்டுள்ளனர் என்கிற பட்டியலும் மத்திய அரசிடம் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.  ஐந்தாயிரம் பக்கங்கள் கொண்ட முகவரிப் பட்டியலை தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியிருப்பதாகவும் அதன் அடிப்படையில் ஆபாச இணைய தளங்களைப் பார்வையிட்டவர்களை அடையாளம் கண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளதாக இணையதள குற்றங்களை விசாரிக்கும் கூடுதல் டிஜிபி அறிவித்திருக்கிறார்.

ஆபாச இணையதளங்களைப் பார்த்தவர்களின் செல்போன் நம்பர்கள் மற்றும் அந்த போனின் ஐ.பி.நம்பர் எந்த நெட்வொர்க் மூலம் பார்த்தார்கள் எத்தனை மணிக்குப் பார்த்தார்கள் போன்ற புள்ளி விவரங்களை அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுப்பி வைக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் இருக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இரண்டு வகையான குற்றங்கள் இதில் வரிசைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.  வெளிநாட்டு இணைய தளங்களில் ஆபாசப் படங்களைப் பார்வையிட்டு அதனை டவுன்லோடு செய்து, மற்றவர்களையும் பார்க்கத் தூண்டுவது முதல் வகை! இரண்டாவது குற்றமாக தமிழகத்திலேயே ஆபாசப் படங்களை எடுத்து அதனை இணையதளங்கள் மூலம் வெளியிடுவோர் என்கிற அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் அமையும் என்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.  120 கோடிப் பெர் கொண்ட இந்தியாவில் இன்று செல்பேசி வசதி என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் இன்றியமையாத பொருளாக மாறி விட்டது. குடும்பத்திற்கு ஒரு செல்பேசி என்று இல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கையிலும் இந்த செல்பேசி இடம் பெற்றுள்ளது.  அதிலும் ஆண்ட்ராய்டு வசதி கொண்ட செல்பேசிகள்தான் பலரிடம் இருக்கிறது.

இதில்தான் இணையதள வசதிகள் இருக்கின்றன.  இந்த இணையதள வசதிகள் மூலம் பல நல்ல விசயங்களையும் பார்க்க முடிகிறது.  குறிப்பாக மருத்துவம், கல்வி, அறிவியல் சார்ந்த இணையதளங்களும் எத்தனையோ இருக்கத்தான் செய்கின்றன.  அதை மட்டுமே பார்க்கும் மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்களும் இருக்கிறார்கள்.  மேலும் அவசரகால உதவிக்கு காவல்துறையை வரவழைக்கும் காவலன் போன்ற ஆப்ஸ்களும் இந்த ஆண்ட்ராய்டு செல்பேசிகளில் மட்டும்தான் இருக்கின்றன.  அணுவின் மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் அறிவியலின் பின்னால் அதன் பாதிப்புகளும் இருக்கின்றன என்று சூழல் இயல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.  அதேபோல மருத்துவ உலகில் இன்றைக்கும் பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே பரிசோதனையிலும் பின்விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன.  ஆனாலும் தீமையை விட நன்மைகள் அதிகம் என்பதால், மனித குலம் தவிர்க்க முடியாமல் பயன்படுத்தி வருகிறது.

அந்த வகையில் செல்பேசிகளும் இன்று மக்களின் அன்றாடப் பணிகளில், தவிர்க்க முடியாமல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  ஆபாச இணையதளங்களைப் பார்வையிடுவது குற்றமான செயல் என்று அறிவித்து அதன் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் அமைந்தால், அதன் பின்விளைவு என்பது மோசமாக இருக்கும்.  வெறுமனே ஓரிருமுறை பார்வையிட்டவர்களைக் கூட கண்டறிந்து கைது செய்வது அந்த பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை போன்ற முடிவுகளுக்கும் செல்லக் கூடும்.  மேலும், செல்பேசியின் உரிமையாளருக்குத் தெரியாமல் நண்பரோ அல்லது உறவினரோ ஆபாச இணையதளங்களைப் பார்வையிட்டால், சம்பந்தமே இல்லாமல் செல்பேசி உரிமையாளர்தான் கைது செய்யப்படுவார்.  எனவே, இது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும்.  அதற்குப் பதிலாக ஆபாச இணையதளங்களை உருவாக்கி, அதனை உலவவிடும் இணையதள முகவர்களை அடையாளமிட்டு சர்வதேச அளவில் கைது நடவடிக்கைகள் தொடர வேண்டும்.  அதைவிட ஆபாச இணையதளங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கண்டறிந்து அந்த இணையதளத்தை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும்.  அதைவிடுத்து பார்வையிடுவோர் மீது நடவடிக்கைகள் என்பது மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொள்ளிவைக்கும் நகைப்புக்குரிய செயலாகத்தான் இருக்கும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *