BREAKING NEWS

ஆபத்தானமுறையில் காட்டாற்றை கடந்து செல்லும் பொதுமக்கள்

கொடைக்கானல் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் பாலம் கட்டப்படாததால் ஆபத்தான முறையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித்தவித்து, ஆற்றைக்கடக்கும் அவலம் தொடர்வதால் உடனடியாக பாலம் கட்டித்தரும்படி முதல்வர், துணை முதல்வரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொடைக்கானல் கீழ்மலை கிராமம் குப்பம்மாள் பட்டி அருகே, கள்ளக்கிணறு கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு வாகன வசதி இல்லாத மண் சாலையில் 2 கிலோ மீட்டர் நடந்து சென்று, சாலை முடிவில் உள்ள ஆற்றைக் கடந்தால் கிராமத்தை அடையலாம்.

வாகன வசதி இல்லாமல் நடந்தேபயணித்து, ஆற்றைக்கடக்கும் இந்த கிராம மக்கள், வருடத்தின் பல நேரங்களில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித்தவித்து, ஆபத்தான முறையில் ஆற்றைக்கடக்கும் சூழல் பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கிராம மக்கள் பல முறை அரசிடம் சாலை அமைக்கவும், ஆற்றைக்கடக்க பாலம் அமைக்கவும் கோரிக்கை விடுத்தும், இதுவரை எதுவும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மலைப்பகுதிகளில் பெய்யும் தொடர் மழைக்கு, காட்டாற்றுவெள்ளம் அதிகமாக ஏற்பட்டு தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே, ஆற்றின் குருக்கே கம்பி கட்டி, அதன் உதவியுடன் ஆற்றைக்கடந்தும், கிராமத்து வாலிபர்கள் ஆற்றின் குருக்கே, வரிசையாக நின்று, மக்களை கரைகடக்க உதவி புரிந்தும் என, பல வழிகளில் ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர். இதுகுறித்து கோட்டாட்சியர் சுரேந்தரிடம் கேட்டபொழுது, கள்ளக்கிணறு கிராமத்திற்கு பாலம் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பாலம் மற்றும் சாலை அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

சாலை வசதி, வாகன வசதியின்றி அவதியடைந்து வரும் இக்கிராம மக்களுக்கு, போர்க்கால அடிப்படையில் ஆற்றை கடந்து செல்ல பாலத்தையாவது கட்டி கொடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் பலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். படம்கொடைக்கானல் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் பாலம் கட்டப்படாததால் ஆபத்தான முறையில் காட்டாற்று வெள்ளத்தை கடக்கும் பொதுமக்களை படத்தில் காணலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *