தற்போதைய செய்திகள்

ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கியதில் 85 ஆடுகள் பலி ஆட்டு கறி விலை சரிவு

ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கியதில் 85 ஆடுகள் பலி
ஆட்டு கறி விலை சரிவு
மதுரை மாவட்டத்தில்
மதுரை மாவட்டத்தில் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலில் 85 ஆடுகள் இறந்துள்ளன. மாவட்ட கால்நடை துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடு வளர்ப்பு

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது காரைகேணி. இந்த கிராமத்தை சேர்ந்த பலர் ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இந்த ஊரை சேர்ந்த முத்தையா என்பவரின் 46 ஆடுகளும், ராமசாமி என்பவருக்கு சொந்தமான 10 ஆடுகளும் அடுத்தடுத்து இறந்தன.

கடந்த 7-ந் தேதி பாலமுருகன் என்பவருடைய 24 ஆடுகளும் சண்முகத்துக்கு சொந்தமான 5 ஆடுகளும் நோய்வாய்ப்பட்டு இறந்தன. அந்த கிராமத்தில் 85 ஆடுகள் வரை இறந்துள்ளன. தொடர்ந்து அந்த ஊரில் ஏராளமான ஆடுகள் அடுத்தடுத்து இறந்து வருவதால் ஆடு வளர்ப்போர் அதிர்ச்சி அடைந்தனர்.

தடுப்புஊசி

தகவல் அறிந்த மாவட்ட கால்நடைத்துறையினர் காரைக்கேணி கிராமத்திற்கு சென்று இறந்த ஆடுகளின் உறுப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது ஆடுகள் ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஆந்த்ராக்ஸ் நோய் தடுப்பு குறித்து கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜசேகர் தலைமையில் கால்நடை துறையினர் அங்கு முகாமிட்டனர். ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த 5 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

மேலும் ஆந்த்ராக்ஸ் நோய் பரவாமல் இருப்பதற்கு அப்பகுதியில் உள்ள ஆடுகளுக்கு தடுப்பு நடவடிக்கையாக ஊசிகள் போடப்பட்டது. ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்த ஆடுகள் புதைக்கப்பட்டன.

மருத்துவ குழு

இதுகுறித்து இணை இயக்குனர் ராஜசேகர் கூறுகையில், இப்பகுதிகளில் அடைப்பான் நோய் என்ற ஆந்த்ராக்ஸ் நோயால் செம்மறி ஆடுகள் இறந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 3 நாட்களில் நோய் கட்டுபடுத்தப்படும். மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கோடைகாலத்தில் மழை பெய்யும் போது மண்ணின் தன்மை மாறும் போது கால் நடைகளை பாதிக்கும் நோய் ஏற்படுகிறது. கால்நடைகளுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாதபோது நோய் தாக்குகிறது.ஆடுகள் மூலம் இந்த நோய் மனிதர்களுக்கு பரவினால் அலர்ஜி ஏற்படும். இதனால் பாதிப்பு ஏற்படாது என்றார்.

இழப்பீடு

ஆந்த்ராக்ஸ் நோயால் தங்கள் ஆடுகளை இழந்தவர்கள் கூறும்போது, எங்களுக்கு ஆடு மேய்ப்பதுதான் தொழில். இதை வைத்து தான் எங்கள் வாழ்க்கை. எங்களுக்கு அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் இப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோயால் மட்டன் கடைகளில் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது.

இதனால் ஆடுகள் வாங்கும் ஆட்டு வியாபாரிகள் இப்பகுதிகளில் ஆடுகள் விலைக்கு வந்தால் வாங்குவதில்லை. டி.கல்லுப்பட்டி பகுதிகளில் மட்டன் விற்பனை சரிந்தும் சிக்கன் விற்பனை அதிகரித்தும் உள்ளது என கறிக்கடை வியாபாரிகள் கூறுகின்றனர்.
Leave a Reply