BREAKING NEWS

ஆந்திர மாநிலத்தில் குழப்பத்தை உண்டாக்கும் பா. ஜனதாவின் ‘ஆபரேஷன் கருடா’ உண்மையாக இருக்கலாம் – சந்திரபாபு நாயுடு கவலை.

ஆந்திர மாநிலத்தில் குழப்பத்தையும், கட்சிகளிடையே பிளவையும் உண்டாக்கும் பாஜகவின் ‘ஆபரேஷன் கருடா’ திட்டம் உண்மையாக இருக்கலாம் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.

4 ஆண்டு நிறைவு

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் தனியாகப் நேற்றுடன் இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகிறது. இது தொடர்பாக விஜயவாடாவில் நவ நிர்மான தீக் ஷா என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்தது.

இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆபரேஷன் கருடா

‘‘கடந்த இரு மாதங்களுக்கு முன் நடிகர் சிவாஜி கூறிய ‘ஆபரேஷன் கருடா’ எனும் பாஜகவின் திட்டம் உண்மையாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

மாநிலத்தில் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி, துண்டாட பாஜக முயற்சிக்கிறது. ஒய்எஸ்ஆர் கங்கிரஸ், ஜனசேனா கட்சி ஆகியவை, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து, அரசியல் திட்டங்களை தீட்டி பாஜகவுக்கு உதவுகின்றன.

தூண்டிவிட்டு கலகம்

மாநிலத்தில் ஒவ்வொரு இடத்திலும் பாஜக கலகம் செய்யத் தொடங்கிவிட்டது. முதலாவதாகத் திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலின் தலைமை அர்ச்சகர் ரமணா தீக்சிதலுவை தூண்டிவிட்டு, கோயில் நகைகள் திருடப்பட்டு ஜெனிவாவில் ஏலம் விடப்பட்டதாக புகார் அளிக்க வைத்து, சிபிஐ விசாரணை கோர வைத்தது. தலைமை அர்ச்சகர் மூலம் புகார் தெரிவித்து கோயில் பெருமையையும், என்னுடைய மரியாதையையும் சீரழிக்க பாஜக முயற்சிக்கிறது.”

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

தென் மாநிலங்களை குறி வைத்து ‘ஆபரேஷன் திராவிடா’

தெலுங்கு நடிகர் சிவாஜி கடந்த மார்ச் மாதம் பாஜக மீது ஒரு பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்தார்.

அதில், ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களின் எதிர்க்கட்சிகளை உடைக்கவும், அரசியல் எதிரிகளுக்கு இடையே வேறுபாடுகளை உண்டாக்கி அழிக்கவும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு திட்டத்தை பாஜகவை வைத்துள்ளது.

இதற்காக “ஆபரேஷன் திராவிடா” என்ற பெயரில் ரூ.4,800 கோடி ஒதுக்கி இருக்கிறது. இதில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்துக்கு “ஆபரேஷன் கருடா” எனும் திட்டம் வைத்துள்ளது. இந்தத் திட்டத்தில் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், மக்கள் பலிகடவாக ஆக்கப்படுவார்கள்.

கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் “ஆபரேஷன் ராவணா” திட்டத்தையும், கர்நாடக மாநிலத்துக்கு “ஆபரேஷன் குமாரா” எனும் திட்டத்தையும் பாஜக செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் குறித்த விரிவான விஷயங்களை விரைவில் வெளியிடுவேன் என்று பகீர் குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

இந்நிலையில் பாஜகவின் ‘ஆப்ரேஷன் கருடா’ திட்டம் உண்மையாக இருக்கலாம் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.




Leave a Reply